தமிழகத்தில் 2 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உழவர் நலம் மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கணேசன் உள்ளிட்ட மூன்று அமைச்சர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் இதுவரை இரண்டு லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் குடும்ப அட்டையில் இருந்து உயிரிழந்தவர்களின் 12 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளது. புதிதாக 11 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு தமிழகம் முழுவதும் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு ஆண்டில் தமிழகம் முழுவதும் 35 லட்சத்து 35 ஆயிரம் மெட்ரிக் டன் நெல், விவசாயிகளிடமிருந்து அரசு கொள்முதல் செய்து உள்ளது. இதில் 7,000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. நேரடி கொள்முதல் நிலையத்தில் பல்வேறு விதமான புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. மாவட்ட ஆட்சியர் புகார் குறித்து ஆய்வு மேற்கொண்டு தவறு செய்பவர் மீது நடவடிக்கை மேற்கொள்வார்.
இதுவரை நேரடி கொள்முதல் நிலையத்தில் தவறு செய்தவர்கள் 150 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமானதாக உள்ளதா என மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு அதன்பிறகு கடைகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM