புதுடில்லி : வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில், சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலைதளத்தில் வெளியிட்ட வரலாற்று பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.
அனுமதி
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்குள்ள வாரணாசியில், விஸ்வநாதர் கோவிலை ஒட்டி அமைந்துள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள சிருங்கார கவுரி சிலையை தினமும் வழிபட அனுமதி கோரி, ஹிந்து பெண்கள் சிலர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த ‘சிவில்’ நீதிபதி, ஞானவாபி மசூதியில் கள ஆய்வு செய்யவும், அதை, ‘வீடியோ’வாக பதிவு செய்யவும் உத்தரவிட்டார். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து டில்லியில் உள்ள ஹிந்து கல்லுாரி வரலாற்று பேராசிரியர், ரத்தன் லால், சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக வினீத் ஜிந்தால் என்ற வழக்கறிஞர், டில்லி போலீசில் புகார் அளித்தார். ஞானவாபி மசூதியில் கிடைத்த சிவலிங்கம் பற்றி இரு மதத்தினருக்கு இடையே வெறுப்புணர்வை துாண்டும் வகையில், ரத்தன் லால் கருத்து வெளியிட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
விசாரணை
இதையடுத்து, டில்லி இணைய குற்றப் பிரிவு போலீசார், ரத்தன் லால் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் நேற்று போலீஸ் விசாரணைக்கு ஆஜரான ரத்தன் லால் கைது செய்யப்பட்டார். இதன் பின் அவர் ஜாமினில் விடுவிக்கப் பட்டார்.
Advertisement