மும்பை,
15-வது ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. இன்று நடைபெற்ற முக்கிய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் வெற்றிபெற்றால் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடும். அதேவேளை இப்போட்டியில் டெல்லி தோல்வியடைந்து விட்டால் 16 புள்ளிகள் பெற்றுள்ள பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து சூழ்நிலை இருந்ததால் இந்த ஆட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 2 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். ஆனால், மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 48 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரரான டிவால்ட் ப்ரிவிஸ் 37 ரன்கள் குவித்து வெளியேறினார். கடைசி கட்டத்தில் அதிடியாக ஆடிய டிம் டேவிட் 11 பந்துகளில் 34 ரன்கள் குவித்தார். இறுதியில் மும்பை 19.1 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் டெல்லியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றிபெற்றது.
மும்பைக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இதன் மூலம் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.