மும்பையில் எஸ்.ஐ .கணவர்..! குமரியில் கஞ்சா வியாபாரி..! காருடன் சிக்கியவரின் பாட்ஷா பின்னணி..!

குமரியில் கஞ்சா வியாபாரம், மும்பையில் தொழில் அதிபர் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பெண் சப் இன்ஸ்பெக்டரின் கணவர் கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளையில் ஈடுபடும் நபர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்கவும் கஞ்சா விற்பனையை கட்டுபடுத்தவும் காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்

இதனையடுத்து தனிப்படை போலீசார் சம்பவத்தன்று தக்கலை, அழகியமண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர் .

சந்தேகத்திற்கு இடமாக வந்த மகாராஷ்டிரா பதிவெண் கொண்ட சொகுசு காரை மடக்கி விசாரணை நடத்தினர். அந்த காரில் இருந்த இருவரும் முன்னுக்கு பின் முரணாக பேசிய நிலையில் காரை சோதனையிட்ட போது அதில் ஏராளமான கஞ்சா பொட்டலங்கள் இருப்பதை கண்ட போலீசார் அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் காரில் கஞ்சாவை கடத்தி வந்த நபர்கள் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த செல்வின் மற்றும் மனோஜ் என்பதும் அதில் செல்வின், பாட்ஷா பட பாணியில் இருவிதமான வாழ்க்கை வாழ்ந்து வரும் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

பளு தூக்கும் வீரரான செல்வின் கடந்த சில வருடங்களுங்களுக்கு முன் மும்பை சென்று அங்குள்ள ஜிம் ஒன்றில் பயிற்சியாளராக பணியாற்றி வந்துள்ளார் . அப்போது அங்கு வந்த மும்பையை சேர்ந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதோடு அங்கேயே குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

காவல்துறையில் உள்ள மனைவியின் மூலம் அங்குள்ள கஞ்சா விற்பனை கும்பலுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட செல்வின், திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த மற்றொரு ஜிம் பயிற்சியாளரான மனோஜ் உடன் சேர்ந்து மும்பையில் இருந்து கஞ்சாவை மொத்தமாக வாங்கி காரில் கடத்தி வந்து கன்னியாகுமரி, கேரளா உள்ளிட்ட இடங்களுக்கு சப்ளை செய்வதும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

கஞ்சா விற்பனையில் லட்சங்கள் சர்வசாதாரணமாக புழங்க தொடங்கியதால், மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தொழிலதிபர் போர்வையில் செல்வின் பாய் என்ற அடைமொழியுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தற்போது விற்பனைக்காக மும்பையில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சாவை கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து விட்டு மீதம் உள்ள நான்கரை கிலோ கஞ்சாவை குமரி மாவட்டத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்த போது போலிசாரிடம் சிக்கி கொண்டதாக செல்வின் பாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து போலீசார் அவர்களிடம் இருந்து நான்கரை கிலோ கஞ்சா 36-ஆயிரம் ரூபாய், கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் மனோஜ் வீட்டில் இருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்ததோடு அவர்களை தக்கலை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பாட்ஷா பட பாணியில் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்த செல்வின் பாய் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரது மனைவியான சப் இன்ஸ்பெக்டரை பிடித்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.