சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதையொட்டி, ராஜீவ் நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, இளநீர், பழ வகைகள், உணவுப் பொருட்கள் படையலாக வைக்கப்பட்டிருந்தன.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் நிர்வாகிகள், மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். வடசென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமையிலான கட்சியினர் திருவொற்றியூரில் இருந்து யாத்திரையாகக் கொண்டுவந்த ராஜீவ் ஜோதி, நினைவிடத்தில் வைக்கப்பட்டது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறும்போது, ‘‘ராஜீவ் படுகொலை செய்யப்பட்டபோது எங்களது கண்ணீர் ஆறாய் ஓடியது. ஆனால், அந்த கொலையாளிகளின் விடுதலையை தற்போது, திருவிழாவாகக் கொண்டாடும்போது எங்கள் இதயத்தில் இருந்து ரத்தக் கண்ணீர் வடிகிறது. குற்றவாளியை கடவுளாக கருத முடியாது. குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பே, எங்கள் கூட்டணியில் இருந்தவர்கள், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று சொன்னவர்கள்தான். இதைத் தெரிந்துதான் நாங்களும் கூட்டணி வைத்துக் கொண்டோம். அவரவர் கொள்கை அவரவர்களுக்கு. இதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’’ என்றார்.
பின்னர், சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலத் தலைவர் உள்ளிட்டோர், ராஜீவ் படத்துக்கு மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சிகளில், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சு.திருநாவுக்கரசர், கே.வீ.தங்கபாலு, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, பொதுச் செயலர் சிரஞ்சீவி, மகளிரணித் தலைவி சுதா, முன்னாள் எம்.பி. பெ.விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.