தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சனிக்கிழமையன்று கூறியதாவது, பொது சுகாதார ஆய்வகத்தில் செய்யப்பட்ட முழு மரபணு வரிசைமுறை பரிசோதனையில் BA.4 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த வகை மாறுபாட்டின் இரண்டாவது பாதிப்பு இதுவாகும். முன்னதாக, மே 20 அன்று தெலங்கானாவில் ஒருவருக்கு BA.4 கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் நாவலூரில் வசிக்கும் 4 பேர் கொண்ட குடும்பத்தில் 19 வயது இளம்பெண்ணுக்கு BA.4 கொரோனா வகை கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல் அறிகுறி தென்பட்டதையடுத்து, அப்பெண்ணும் அவரது தாயாரும் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அவர்களுக்கு மே 9 அன்று கொரோனா பாதிப்பு உறுதியானது. தொடர்ந்து, இருவரது மாதிரிகளும் முழு மரபணு வரிசைமுறைக்காக சுகாதாரத் துறையினரால் அனுப்பப்பட்டிருந்தது.
கொரோனா பாதிப்பு உறுதியான இருவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில், மூன்று நாள்களில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வந்தனர். இருவருக்கும் எவ்வித பயண வரலாறும் இல்லை.
ஆய்வக பரிசோதனை முடிவில், தாயாருக்கு பிஏ.2 வகை கொரோனா பாதிப்பும், இளம்பெண்ணுக்கு பிஏ.4 வகை கொரோனா பாதிப்பும் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் வீட்டிற்கு சென்ற சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், இருவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார். அவர்களுடன் தொடர்பில் இருந்த யாருக்கும் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை
இதுகுறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், ” எஸ்பிஹெச்எல்லில் முழு மரபணு வரிசைமுறையைச் செய்யும் வசதி இருப்பதால், பிஏ.4 மாறுபாட்டை விரைவாக அடையாளம் காண முடிந்தது. தமிழ்நாட்டில் மட்டுமே இந்த வசதி உள்ளது. இந்த புதிய வகை கொரோனா ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகளவில் பதிவாகியுள்ளது. இந்த கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதுவரை தமிழகத்தில் ஒமிக்ரான் உள்பட, நான்கு வகை கொரோனா தொற்றுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. பிற மாநிலங்களில் இந்த புதியவகை தொற்று பரவியுள்ளதா என மத்திய அரசு தெளிவுபடுத்தவேண்டும்” என்றார்.
ஜனவரி முதல் மே வரை மொத்தம் 3,328 மாதிரிகள் முழு மரபணு வரிசைமுறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 96% மாதிரிகள் ஒமிக்ரான் வகை மாறுபாட்டின் மாதிரிகள் என அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றன.