புதுடெல்லி: தலைமைத் தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக கடந்த 15-ம் தேதி ராஜீவ் குமார் பதவியேற்றுக் கொண்டார். இவரது தலைமையின் கீழ் 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களின் தேர்தல் நடைபெற உள்ளது. 2020 ஆகஸ்டில் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று தேர்தல் ஆணையர்கள் கூட்டம் நேற்று ராஜீவ் குமார் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தேர்தல் ஆணையர்களுக்கு மாதம்தோறும் வழங்கப்பட்டு வரும் சிறப்பு சலுகைகளை கைவிடுவது குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு, விருந்தினர் உபசரிப்புக்காக மாதம் ரூ.34 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கு, வருமான வரி சலுகையும் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஊக்கத்தொகை, வரிச்சலுகைத் தேவையில்லை என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் தெரிவித்தனர். மேலும், ஆண்டுக்கு மூன்று முறை வழங்கப்படும் குடும்பச் சுற்றுலா பயணப் படியை ஒரு முறை மட்டுமே வழங்கினால் போதும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தேர்தல் ஆணையர்களின் இந்த பரிந்துரைகள் மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.