சென்னை: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை:
தமிழர்களின் தொன்மையையும், பாரம்பரியத்தையும் தொடர்ந்து சிதைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கும் திமுக அரசு, ஒருதலைப்பட்சமாக தருமை ஆதீன பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்தது.
திராவிடம் என்பது தெலுங்கர், கன்னடர், மலையாளர், துளுவர், தமிழர் ஆகியோரின் கூட்டான வாழ்விடத்தை குறிக்கும் சொல்லாகும். எனவே, திமுக தன் திராவிட மாடலாக, தமிழரின் தனித்துவம், அடையாளம், தமிழர் தன்மானம், பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, தமிழர் மேன்மை ஆகியவற்றை அழித்துவிட்டு அதை ‘திராவிட’ என்ற பொது பண்பில் அடைக்க நினைக்கிறது. தமிழர் வாழ்வியல், இறை நம்பிக்கையோடு கலந்திருப்பதால், இறை அடியார்கள் அச்சுறுத்தலை, கடவுள் மறுத்தலை திமுக கையில் எடுக்கிறது.
இதை நாம் இனியும் அனுமதிக்க கூடாது. நம் மரபுகளில் கைவைத்த மாநில அரசுக்கு பாடம் புகட்டுவோம். தமிழர் மானம் காக்க, தமிழக பாஜக தலைமை ஏற்று வருகிறது. தாமரை சொந்தங்கள் எல்லாம் தங்கள் படை திரட்டி வாருங்கள். நாம் அனைவரும் தருமை ஆதீனத்தில் ஒன்றுகூடுவோம். பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில், தெய்வீக திருவருள் பெற்ற குருமகா சந்நிதானத்தை தோளில் சுமப்போம்.