தூத்துகுடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அமமுக தலைவர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை காரணமாக தூத்துக்குடி மக்களின் வாழ்வாதாரமே பாதிக்கிறது என மாவட்டம் முழுதும் மக்கள் திரண்டு தொடர் போராட்டங்கள் நடத்தினார்கள். இதில் 100-வது நாள் போராட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி மனு கொடுக்கச் சென்றபோது போலீஸார் தடுத்தனர். இதில் ஏற்பட்ட கலவரத்தில் எவ்வித முன் அனுமதியின்றி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். போராட்டத்திற்கு தலைமை தாங்கிய சிலரையும் குறிவைத்து கொல்லப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. வழக்கமாக துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளை பயன்படுத்தாமல் பிஸ்டல் வகை, எஸ்.எல்.ஆர் வகை, 303 ரைபில் மற்றும் கார்பன் ரக வகைகளை சேர்ந்த 17 துப்பாக்கிகளை பயன்படுத்தினர். இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டின் 4வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் அமமுக தலைவர் தினகரன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதன் 4ம் ஆண்டு நினைவு தினத்தில், அவர்களுக்கு இதய அஞ்சலியைச் செலுத்துகிறேன். மனிதநேயமற்ற அச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவிடாமல் தடுப்பதும்தான் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும். அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்தில் இத்தகைய அதிகார அத்துமீறல்களுக்கு முடிவு கட்டமுடியும்” என்று தெரிவித்துள்ளார்.