பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு நேற்று அதிரடியாக குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. பெட்ரோலுக்கு 8 ரூபாயும், டீசலுக்கு 6 ரூபாயும் குறைத்தது. இதன் காரணமாக இன்று, சென்னையில் பெட்ரோல் விலை ரூ8.22 குறைந்து ரூ102.63க்கும், டீசல் விலை ரூ6.70 குறைந்து ரூ94.24க்கும் விற்பனையானது. சுமார் 45 நாள்களுக்கு பிறகு, பெட்ரோல், டீசல் விலை குறைந்தது.
இதேபோல், பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை அந்தந்த மாநிலங்கள் குறைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவர் கூறியதாவது, மாநில அரசுகளும் எங்களை போல வரியை குறைக்க வேண்டும். முக்கியமாக கடந்த நவம்பரில் நாங்கள் வரியை குறைத்த போது, வரியை குறைக்காத மாநில அரசுகள் வரியை குறைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். அதன்படி, கேரளாவும், ராஜாஸ்தானும் தங்களது வாட் வரியை குறைத்துள்ளன.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசுகள் குறைக்க சொன்னதற்கு, தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, எந்த மாநிலத்தின் கருத்தையும் கேட்காமல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியது. வரியை உயர்த்தி போது, அதைப்பற்றி மாநிலங்களிடம் தெரியப்படுத்தவில்லை. 2014 முதல் பெட்ரோல் ரூ23, டீசல் ரூ29 என மத்திய அரசு தனது வரியை உயர்த்தியுள்ளது. ஆனால், உயர்த்தியதில் இருந்து 50சதவீதம் குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்வதா? இதுதான் உங்கள் கூட்டாச்சியா என கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் பகிர்ந்துள்ள வீடியோவில், 2006-2011 வரை மூன்று முறையும், தற்போது ஆட்சிக்கு வந்த பின் ஒருமுறையும் வரியை குறைத்துள்ளோம். அதிமுக அரசில் இடையில் வரியை உயர்த்தினர். அதன்பின் நாங்கள் குறைத்து இருக்கிறோம். இதை எல்லாம் சேர்த்து கணக்கிட்டால் மொத்தமாக பெட்ரோல் மீது 8 ரூபாய் வரி உயர்த்தப்பட்டு உள்ளது. டீசல் வரி 11 ரூபாய் உயர்த்தப்பட்டது.
ஒப்பீட்டளவில் 2014-2021 வரையிலான காலகட்டத்தில், பெட்ரோல், டீசல் மீதான வரியை மாநில அரசை விட மத்திய அரசு தான் மிக மிக அதிகமாக உயர்த்திள்ளது. தனது வருவாயில் 18-20 சதவிகிதத்தை எரிபொருள் மீதான வரி மூலமாக மத்திய அரசு பெறுகிறது. ஆனால், ஏன் மாநில அரசுகள் குறைக்கவில்லை என்று மத்திய அரசு கேட்கிறது
தமிழ்நாடு அரசு ஏற்கனவே வரியை குறைத்துவிட்டது. ஆகஸ்ட் மாதமே குறைத்துவிட்டோம். என்னுடைய கேள்வி. மூன்று முறை வரியை உயர்த்தி இருந்தால் நீங்கள் சொன்னபடி வரியை குறைக்கலாம். ஆனால் உங்கள் அளவிற்கு வரியை உயர்த்தவில்லையே? பின்னர் ஏன் எங்களிடம் வரியை குறைக்க சொல்கிறீர்கள்? இது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது கிடையாதா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டின் போது பேசிய மோடி, கடந்தாண்டு நவம்பர் மாதம் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தது.மாநில அரசுகளும் இதேபோல பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு அரசு நவம்பரில் வரியை குறைக்கவில்லை. அதற்கு முன்பாக ஆகஸ்டில் வரியை குறைத்தது குறிப்பிடத்தக்கது.