நாமக்கல்லில் விதவைப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த கல்லூரி மாணவரொருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல்லை சேர்ந்த 31 வயது விதவைப் பெண் ஒருவர், திருச்செங்கோட்டை சேர்ந்த தனது நண்பர் ஒருவருடன் கடந்த 19-ந் தேதி, நாமக்கல் அருகே உள்ள வீசாணம் ஏரி பகுதியில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அந்த பகுதிக்கு சென்ற 4 பேர், அப்பெண்ணையும் அவரது நண்பரையும் மிரட்டி 1¼ பவுன் செயின் மற்றும் 2 ஆயிரம் பணத்தை பறித்துள்ளனர். தொடர்ந்து அவ்விருவரையும் அந்த கும்பல் தாக்கியதோடு மோட்டார் சைக்கிளில் அமர வைத்து, அங்கிருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவில் பயனற்று இருந்த கட்டடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் அந்த கட்டடத்தில் வைத்து அப்பெண்ணை கொடூரமான முறையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் அதை அந்தப் பெண்ணின் ஆண் நண்பருடைய செல்போனை பறித்து 4 பேர் கும்பல் வீடியோ பதிவு செய்துள்ளது. அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பரை மிரட்டி ‘கூகுள் பே’ மூலம் பணத்தை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இவை அனைத்துக்கும் பிறகு, `இது குறித்து வெளியே சொன்னால் இருவரையும் கொன்று விடுவோம்’ எனக் கூறிவிட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நாமக்கல் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் நாமக்கல் அழகு நகரை சேர்ந்த நவீன்குமார் (வயது 21), வீசாணத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் தினேஷ்குமார் (21), பெயிண்டர் முரளி (26) மற்றும் வல்லரசு (24) ஆகியோர் விதவைப் பெண்ணை தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததோடு, நகை, பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றது உறுதியாகியிருக்கிறது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நவீன்குமார், தினேஷ்குமார், முரளி ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நகை மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் தலைமறைவாக உள்ள வல்லரசை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே நவீன்குமார் உடல்நிலை சரி இல்லாத காரணத்தால் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பெண்கள் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கையில், `வெளியே தெரிந்தால் அவமானம்’ `நமக்குதான் கெட்டபெயர்’ `நம்மைதான் குறை சொல்வார்கள்’ என நினைக்காமல், குற்றம் செய்பவர்களை சட்டத்தின்முன் துணிவோடு நிறுத்த வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏனெனில் இங்கு தண்டிக்கப்பட வேண்டியதும், அவமானத்துக்கு உள்ளாக வேண்டியதும் சம்பந்தப்பட்ட குற்றத்தை செய்தவர்கள்தானே தவிர, பாதிக்கப்பட்டவர்கள் இல்லை!
இதையும் படிங்க… ”சக உயிராக பெண்ணை பார்க்கும் எண்ணம் வேண்டும்”- பாலியல் வன்கொடுமை குறித்து மு.க.ஸ்டாலின்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM