மதுவிலக்கை செயல்படுத்துவதற்கான கால அட்டவணையை அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ திருப்பெரும்புதூரைஅடுத்த சின்ன மதுரப்பாக்கத்தில் குடிபோதையில் தந்தையே இரு மகள்களை உடுட்டுக்கட்டையால் அடித்துக் கொலை செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மது எவ்வளவு மோசமானது… அழகான குடும்பங்களை அது எவ்வாறு சீரழிக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு தான் எடுத்துக்காட்டு ஆகும். குடும்பத்தலைவரின் குடிப்பழக்கத்தால் குடும்பங்கள் சீரழிவதற்கு இது மட்டுமே ஒற்றை எடுத்துக்காட்டு அல்ல. ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு குடும்பம் மதுவால் சீரழிந்து கொண்டு தான் இருக்கிறது. குடியால் குழந்தைகளின் உணவு, கல்வி, எதிர்காலம் பறிக்கப்படுகின்றன.
தமிழக அரசின் டாஸ்மாக் வருமான உயர்வும், குடும்பங்களின் மகிழ்ச்சியும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்க முடியாது. மது வருமானம் உயர, உயர ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் சீரழிவது அதிகரிக்கும். இந்த உண்மையை தெரியாதது போலவே தமிழக அரசு நடந்து கொள்ளக் கூடாது. தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், மதுவிலக்கை ஏற்படுத்துவது தான் தமது நோக்கம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
அதை செயல்படுத்துவதற்காக நேரம் வந்து விட்டது. எனவே, இனியும் தாமதிக்காமல் மதுவிலக்கை செயல்படுத்துவதற்கான கால அட்டவணையை அரசு அறிவிக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.