பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து ட்விட்டரில் தனது கருத்தைப் பதிவிட்டிருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அதில் சிறு திருத்தம் செய்வதாக இப்போது தெரிவித்து இன்னொரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.8, டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.6 வீதம் குறைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஒரு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 என 12 சிலிண்டர்களுக்கு பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டப் பயனாளிகள் 9 கோடி பேருக்கு மானியம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்திய அரசு நேற்று பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்த நிலையில் மாநிலங்களுக்கு பங்கு கொடுக்கும் செஸ் வரியை குறைக்காமல், கலால் வரியை மட்டும் குறைத்தது ஏன்? பெட்ரோல் டீசலுக்கான விலை கடந்த சில மாதங்களில் பத்து ரூபாய் அதிகரித்து விட்டு ஒன்பது ரூபாய் ஐம்பது காசுகள் குறைப்பு ஏன்?” என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் ப.சிதம்பரம் இன்றொரு ட்வீட்டைப் பதிவு செய்துள்ளார் அதில், “பெட்ரோல், டீசல் வரி குறைப்பு தொடர்பான அறிவிக்கை வெளியாகியுள்ளது. நிதியமைச்சர் கலால் வரி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார். ஆனால் கூடுதல் கலால் வரி தான் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த பழுவும் மத்திய அரசுக்குத்தான். அந்த வகையில் நான் எனது கருத்தைத் திருத்திக் கொள்கிறேன். ஆனால் மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் வரியிலிருந்து குறைந்த பங்களிப்பையே பெறுகின்றன. அவற்றின் வருமானம் பெட்ரோல், டீசல் வாட் வரியை நம்பியே உள்ளது. ஆகையால் மத்திய அரசு மாநிலங்களுக்கு அதிக நிதியும், கூடுதல் மானியங்களும் அளிக்காத வரையில் மாநிலங்களால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க முடியுமா என்று தெரியவில்லை. இரண்டு மோசமான நிலைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மாநிலங்களிடம் இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்..