காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி குறுவை சாகுப்படிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் முன்னதாகவே திறந்துவிட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தற்போது காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால், மேட்டூர் அணைக்கு அதிக நீர்வரத்து காணப்படுகிறது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்ட அளவு 115.35 கன அடியாகவும், நீர் இருப்பு 86.25 டி.எம்.சி அடியாகவும் உள்ளது.
அதிக நீர்வரத்து தொடர்வதால் அணை தனது முழு கொள்ளளவை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவிரி டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து வழக்கமாக நீர் திறக்கப்படும் நாளான ஜூன் 12-க்கு முன்பாகவே, மே 25 முதல் நீரைத் திறந்துவிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ம் நாள் அல்லது அதற்கு முன்பாக குறுவை சாகுபடிக்காக நீர் திறந்துவிடப்படும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் ஜூன் 12-க்கு முன்னதாக நீர் திறந்துவிடப்படுவது என்பது இரண்டாவது முறையாகும்.
அதுவும் மே மாதத்தில் மேட்டூரிலிருந்து நீர் திறந்துவிடப்படுவது என்பது இதுவே முதல் முறையாகும். இதனால் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும்.
மேலும், நடப்பாண்டில் டெல்டா மாவட்டங்களில் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு, ஏப்ரல் 23 முதல் துவங்கப்பட்டு, ரூபாய் 80 கோடி மதீப்பீட்டில் போர்கால அடிப்படையில் நடைப்பெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் மே 31-க்குள் நிறைவடையும், இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரானது, முழுமையாக டெல்டா பகுதியின் கடைமடை வரை அனைத்துப் பகுதிகளுக்கும் சென்றடையும்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.