கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இன்று மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அண்டை நாடான சீனாவின் வூகான் நகரில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று பரவியது. இந்த வைரஸ் தொற்று, இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், அது, பல்வேறு வகைகளில் உருமாற்றம் அடைந்து வருவது, சுகாதாரத் துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில மாதங்களாக, கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தலைநகர் பீஜிங், சாங்சுன், ஜிலின் உள்ளிட்ட நகரங்களில், கொரோனா பரவல் காரணமாக, ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
நாய் உணவை சாப்பிட ரூ.5 லட்சம் – பிரபல நிறுவனம் அறிவிப்பு!
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, தலைநகர் பீஜிங்கில், மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இது பற்றி சீனாவில் இருந்து வெளி வரும் குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், பீஜிங் நகரின் ஹைதியான் மாவட்டத்தில் அதிகாரிகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளனர். அதனுடன், சாவோயாங், பெங்தை, சன்யி மற்றும் பங்ஷான் ஆகிய மாவட்டங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என அரசின் நகர செய்தி தொடர்பாளர் சூ வெளியிட்ட அறிக்கையை சுட்டி காட்டியுள்ளது.
இதன்படி, இன்றில் இருந்து பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த அனைத்து இடங்களும், உடற்பயிற்சி கூடங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் வணிக வளாகங்களும் மூடப்படுகின்றன. பீஜிங்கில் இயற்கையாக அமைந்த அனைத்து மேம்படுத்தப்பட்ட சுற்றுலா பகுதிகளுக்கும் மக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்படுகிறது. எனினும், பூங்காக்களில் 30 சதவீதம் பேர் செல்ல அனுமதி அளிக்கப்படும். பீஜிங்கின் 5 மாவட்ட குடியிருப்புவாசிகள் அனைவரும் வருகிற 28 ஆம் தேதி வரை வீட்டில் இருந்து வேலை செய்யும்படி கேட்டு கொள்ளப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.