ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நிலக்கரி திருட்டு நடந்ததாக கூறப்படும் எஸ்இசிஎல் சுரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் , எஸ்.பி ஆகியோர் நேற்று ஆய்வு நடத்தினர்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா மாவட்டத்தில் உள்ள எஸ்இசிஎல் நிலக்கரி சுரங்கத்தில் மக்கள் கூட்டம், கூட்டமாக நிலக்கரியை திருடி செல்வதாக ஒரு வீடியோவை முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், சத்தீஸ்கர் பா.ஜ மூத்த தலைவருமான சவுத்திரி தனது ட்விட்டரில் வெளியிட்டார். இந்த திருட்டு குறித்து முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என அவர் கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலாக பரவியது. இது குறித்த விசாரணைக்கு சத்தீஸ்கர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஆனால் எஸ்இசிஎல் நிலக்கரி சுரங்கத்தில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதை கோர்பா மாவட்ட நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
எஸ்சிஇஎல் நிலக்கரி சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமான சுரங்கங்களில் மாவட்ட ஆட்சியர் ராணு சாகு, எஸ்.பி போஜ்ரம் படேல் ஆகியோர் நேற்று ஆய்வு நடத்தினர்.
அதன்பின் ஆட்சியர் ராணு சாகு கூறும்போது, ‘‘கடந்த பிப்ரவரி மாதம் எஸ்சிஇஎல் மற்றும் மத்திய தொழில்பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி நிலக்கரி சுரங்கபகுதியை சுற்றி வேலி மற்றும் அகழி அமைக்கும்படி அறிவுறுத்தினேன். ஆனால், எந்த பணியும் செய்யவில்லை. நிலக்கரி சுரங்கம் அருகே திருட்டை தடுக்க பாதுகாப்பு சோதனைச் சாவடியை விரைவில் அமைக்கும்படி உத்தரவிட்டுள்ளேன்’’ என்றார்.