உதகையில் தொடரும் மழை: மலர் கண்காட்சி சிறப்பு அலங்காரம் சரிந்ததால் பதற்றம்

உதகை: உதகையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முகப்பு தோற்ற சிறப்பு அலங்காரத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழக கடற்கரை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் உள்மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படியே நீலகிரி மாவட்டத்தில் காலநிலை மாற்றம் ஏற்பட்டது. கடந்த 10 நாட்களாக வானிலை மேகமூட்டமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. காற்றுடன் மழை பெய்து வந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், மழை தொடர்ந்து வருவதாலும், முதல்வர் வருகையால் ஏற்பட்ட கெடுபிடிகளால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.

கோடை மழை எதிர்பார்த்த அளவு பெய்யாத நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயரவில்லை. இந்நிலையில், தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்து அணைகளில் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலங்காரம் சரிந்தது: இந்நிலையில், கடந்த சில நாட்களாகப் பெய்யும் தொடர் மழை காரணமாக மலர் கண்காட்சி நடந்து வரும் உதகை தாவரவியல் பூங்காவில் முகப்பு பகுதியில் ஒரு லட்சம் மலர்களால் உருவாக்கப்பட்ட, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக முகப்பு தோற்றத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. முதல்வர் உதகையில் உள்ள நிலையில் நடந்த இந்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதனையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக நடுவட்டத்தில் 19 மி.மீ., மழை பதிவானது. தேவாலாவில் 12, அவலாஞ்சியில் 11, உதகையில் 10.2, பந்தலூரில் 10, கேத்தியில் 9, கூடலூரில் 7, கிளன்மார்கனில் 7, ஓவேலி 7 மி.மீ., மழை பதிவானது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.