`ஜெயலலிதா தன் தங்கச் செயினை கழற்றிக் கொடுத்தது இவருக்குத்தான்'- பாடகி சங்கீதா சஜித் மரணம்!

கேரளத்தைச் சேர்ந்த சினிமா பின்னணி பாடகி சங்கீதா சஜித் (46) மரணமடைந்தார். சிறுநீரக நோய் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலை மரணம் அடைந்தார். கோட்டயத்தைச் சேர்ந்த சஜித்-ராஜம்மா ஆகியோரது மகளான சங்கீதா சஜித் சென்னையில் வசித்துவந்தார். இவருக்கு அபர்ணா என்ற ஒரே மகள் உண்டு. கிருகலெட்சுமி புராடைக்ட் நிறுவனத்தின் ‘என்றே சொந்தம் ஜானகிகுட்டி’ என்ற மலையாள சினிமாவில் ‘அந்திரி பூவட்டம் பொன்னுருளி…’ என்ற பாடல்தான் அவர் முதலில் பாடிய பாடல். அய்யப்பனும் கோசியும் சினிமாவில் இவர் பாடிய சோக பாடல் ஹிட்டடித்தது.

சங்கீதா சஜித்

குருதி என்ற மலையாள சினிமாவில் இறுதியாகப் பாடினார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். தமிழில் ‘நாளைய தீர்ப்பு’ என்ற சினிமா மூலம் பின்னணி பாடகியாக அறிமுகம் ஆனார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் `மிஸ்டர் ரோமியோ’ படத்தில் பின்னணி பாடகி சங்கீதா சஜித் பாடிய `தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை; தங்கத்தைக் காதலிக்கும் பெண்களா இல்லை…’ என்ற பாடல் ஹிட்டடித்திருந்தது. கே.பி.சுந்தராம்பாள் பாடிய ஞானப்பழத்தை பிழிந்து என்ற பாடலை அதே ராகத்தில் பாடுவதில் வல்லவர்.

ஒருமுறை தமிழக அரசின் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சியில் ஞானப்பழத்தைப் பிழிந்து என்ற பாடலை பாடினர். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த அன்றைய முதல்வர் ஜெயலலிதா மேடைக்குச் சென்று தனது கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க செயினை கழற்றி சங்கீதா சஜித்துக்கு பரிசாக அளித்து பெருமைப்படுத்தினார். சோகம், காதல் உணர்வுகளை பாடல்கள் மூலம் ரசிகர்களின் உள்ளத்தில் கடத்துவதில் வித்தகர். பாரம்பர்ய இசையையும் பாடும் திறமை மிக்க சங்கீதா சஜித்தின் மரணம் இசை உலகிற்கு பேரிழப்பு. அவரது இறுதிச்சடங்கு திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.