பிரித்விராஜ் படத்தில் சித்தரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிஜத்தில் நடந்த ஆச்சரியம்

பொதுவாக உண்மை சம்பவங்களை படமாக்கும்போது அதை அப்படியே சொன்னால் சட்ட சிக்கல்கள் வரும் என்பதால் பெரும்பாலும் கற்பனை கலந்து அவற்றை படமாக்குவார்கள். அந்தவகையில் சமீபத்தில் மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஜனகனமன படம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டது.

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு ஆந்திராவில் பெண் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த குற்றத்தில் ஈடுபட்டதாக நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்கள் தப்பி ஓட முற்பட்டதாக கூறி என்கவுன்டரில் சுட்டு தள்ளினர். இதற்கு மக்கள் மத்தியில் அப்போது மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

நிஜத்தில் நடந்த இந்த நிகழ்வை எடுத்துக் கொண்டு இந்த என்கவுண்டர் விஷயமே இறந்துபோன பெண் மருத்துவருக்கான நீதி கேட்பதற்காக நடக்கவில்லை என்றும் அரசியல் காரணங்களுக்காக இந்த என்கவுண்டரை இந்த விதமாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்றும் தங்களது கற்பனையை வைத்து இந்த படத்திற்கு திரைக்கதை அமைத்து இருந்தனர்.

இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்த பிரித்விராஜின் வாதமே இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகளையும் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துவதற்கு முன்பாகவே எந்தவித ஆதாரங்களையும் சாட்சியங்களையும் சேகரிக்காமல் அவசரகதியில் சுட்டுக்கொன்றது ஏன் என்பதை மையப்படுத்தியே அமைக்கப்பட்டிருந்தது.

தற்போது அதிர்ச்சித் தரும் தகவல் என்னவென்றால் ஆந்திராவில் நிஜத்தில் நடைபெற்ற அந்த என்கவுண்டர் சம்பவத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த விசாரணை கமிஷன் தற்போது அந்த என்கவுண்டர் போலியான என்கவுண்டர் என்றும் குற்றம் சாட்டப்பட்ட அந்த நால்வரையும் சுட்டுக்கொல்லும் உள்நோக்கத்துடனேயே அழைத்துச் சென்று அந்த என்கவுண்டரை நடத்தியதாகவும் தற்போது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

ஒரு நிஜ நிகழ்வை கற்பனை கலந்து படத்திற்காக மாற்றி எழுதி படமாக்கிய நிலையில், தற்போது அந்த கற்பனையே உண்மை என்பது போல மாறி இருப்பது மிகப்பெரிய ஆச்சரியம் தருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.