சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள மால் ஒன்றின் நான்காவது தளத்தில் டி.ஜே ஆடல் பாடல் நிகழ்ச்சி நடப்பதாகவும், இந்த நிகழ்ச்சிக்கு ரூ.1,500 என டிக்கெட் விலை நிர்ணயித்து அது இணையத்தில் விற்கப்படுவதாகவும், நிகழ்ச்சிக்கு முறையாக அனுமதி பெறவில்லை என்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. உடனே திருமங்கலம், அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று கண்காணித்தனர்.
அப்போது `Great Indian Gathering’ என்ற நிகழ்ச்சியில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த `Mandra gora’ என்ற உலகப்புகழ் பெற்ற நபரால் டி.ஜே ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது உறுதியானது. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 900 இளைஞர்கள் கலந்துகொண்டதும், அவர்கள் அனைவருக்கும் மது விருந்து அளிக்கப்பட்டதும் தெரியவந்தது.
மேலும், 20 வயதுக்கும் குறைவான ஆண்கள், பெண்களுக்கு மது அளிக்கப்பட்டதும், எந்த அனுமதியும் பெறாமல் நிகழ்ச்சியை நடத்தியதும் தெரியவந்தவுடனே காவல்துறையினர் நிகழ்ச்சியை நிறுத்தியிருக்கின்றனர். மேலும், அனைவரையும் நான்காவது மாடியிலிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றியிருக்கின்றனர். அதையடுத்து, 844 விலை உயர்ந்த மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாகத் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப் பிரிவின் கீழ் அண்ணாநகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறை நிகழ்ச்சி நடத்திய விக்னேஷ், சின்னதுரை, மார்க், பாரத் மற்றும் சிலர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், இந்த மது விருந்தில் போதைப்பொருள்கள் பயன்படுத்தப்பட்டதா என்றும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், இந்த மது விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன் (23) என்பவர் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு நடனமாடிக் கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து அவர் உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பின்னர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது. போலீஸார் இந்தச் சம்வபம் தொடர்பாகவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.