நெல்லை அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் தனியார் கல்குவாரியில் கடந்த 14-ந் தேதி பாறைகள் சரிந்து விழுந்ததில் 6 தொழிலாளர்கள் சிக்கினர். இதில் முருகன், விஜயன் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர். செல்வம் என்பவர் மீட்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு முருகன், செல்வகுமார் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
பாறை இடிபாடுகளுக்கிடையே சிக்கிய 6-வது நபரான ஊருடையான் குடியிருப்பை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. உயிருடன் மீட்கப்பட்டவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் குறிப்பிட்ட இடத்தில் அவரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கல்குவாரி விபத்தில் உயிரிழந்த நிலையில் 6-வது நபரின் உடல் மீட்கப்பட்டது. கற்குவியல்களுக்கு கீழே லாரியில் சிக்கியிருந்த ராஜேந்திரனின் உடலை மீட்புக் குழுவினர் மீட்டனர்.
6-வது நபரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் கடந்த 8 நாட்களாக நடைபெற்று வந்த மீட்புப் பணி நிறைவடைந்தது.
கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 6 பேரில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்..
ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவன்- 9 மணி நேர போராட்டத்திற்கு பின் சடலமாக மீட்பு