சென்னையில் விரைவில் 500 பேட்டரி பேருந்துகள்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்

கரூர்: சென்னையில் விரைவில் 500 பேட்டரி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

கரூர் மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் பயிலரங்கம் மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தலைமையில் கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் அரங்கத்தில் இன்று (மே 22ம் தேதி) நடைபெற்றது.

மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், எம்.பி. அப்துல்லா, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியது, ”நாட்டில் திராவிட சித்தாந்தம் தற்போது எந்த வகையில் தேவை என்பதை எடுத்துரைக்கும் விதமாகவும் இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு திராவிட சித்தாந்தத்தை கொண்டு சேர்க்கும் விதமாக பயிலரங்கு நடைபெற்றது. திராவிடம் எந்தப் புள்ளியில் தொடங்கி எந்தப் புள்ளியில் பயணிக்கிறது என்பது குறித்தும் திராவிடத்தின் மைய நாடாக உள்ள சமூக நீதி கொள்கை மூலம் தமிழகத்தை சீரான வளர்ச்சி பாதையில் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பெற்ற மாநிலமாக உருவாகி இருககிறது. நாட்டில் தமிழகம் பொருளாதார நிலையில் திராவிட கொள்கையால் எப்படி வளர்ச்சி பெற்றுள்ளது என்பது பயிலரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.

மத்திய அரசு சிலிண்டருக்கு வழங்க வேண்டிய மானியத்தை முழுமையாக வழங்கவேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தப்போது டீசல் விலை என்ன தற்போது பாஜக ஆட்சியில் என்ன விலை என்பதை பார்த்து மக்கள் மீது அரசு ஏற்றி வைத்துள்ள வரி சுமையை மத்திய அரசு குறைக்கவேண்டும். மாறாக மாநில அரசுக்கு கிடைக்கும் வருவாயை குறைக்கவேண்டும் என கூறுவது தேவையற்ற வாதம்.

பேருந்து பயண கட்டணம் குறித்து கடந்த 4 நாட்களுக்கு முன் உயர்த்தப்படாது என முதல்வர் கூறினார். அதையேதான் நானும் சொல்கிறேன். சென்னையில் விரைவில் 500 பேட்டரி பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன் சேவையைப் பொறுத்து அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் அதற்கான கட்டமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

கரூர் வி.செந்தில்பாலாஜி அறக்கட்டளையில் நடந்த போட்டித் தேர்வுக்களுக்கான இலவச பயிற்சி மையத்தில் உரையாற்றுகிறார் மாநில
போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர். அருகில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, எம்.பி. அப்துல்லா, மாநில திட்டக்குழு
துணைத்தலைவர் ஜெயரஞ்சன், மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத். | படம்: க.ராதாகிருஷ்ணன்.

முன்னதாக, வி.செந்தில்பாலாஜி அறக்கட்டளை சார்பில் போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறுவதை அமைச்சர்கள் வி.செந்தில்பாலாஜி, எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.பி. அப்பதுல்லா, மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் ஆகியோர் பார்வையிட்டு வாழ்த்திப் பேசினர். மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.