திருச்சி: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டு மேட்டூர் அணை வரும் 24-ம்தேதி திறக்கப்படவுள்ளது. இதனால் நிகழாண்டு சாகுபடி பரப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணை முன்கூட்டியே திறக்கப்படுவதை டெல்டா விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
மேட்டூர் அணையில் 90 அடிக்குமேல் நீர் இருப்பு இருக்கும்பட்சத்தில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்படுவது வழக்கம். உரிய காலத்தில் அணை திறக்கப்பட்டு கடைமடை வரை முழுமையாக தண்ணீர் சென்று சேரும்பட்சத்தில் குறுவை நெல் சாகுபடி ஏறத்தாழ 3.5 லட்சம் ஏக்கரில் நடைபெறும்.
கடந்த ஆண்டில் தஞ்சாவூரில் 1.05 லட்சம், திருவாரூரில் 1.01 லட்சம், நாகப்பட்டினத்தில் 4,500, மயிலாடுதுறையில் 96,750, திருச்சியில் 12 ஆயிரம், அரியலூரில் 3 ஆயிரம், கடலூரில் 41 ஆயிரம் என மொத்தம் 3,63,650 ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. இது வழக்கமான சாகுபடி பரப்பைவிட கூடுதலாகும்.
மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரமாக நீர் வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து, நேற்று மாலை நிலவரப்படி 116 அடியை எட்டியுள்ளது. முழுக் கொள்ளளவான 120 அடி இன்னும் ஓரிரு நாளில் எட்டப்படும் நிலை உள்ளது.
இதனிடையே டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை மே 24-ம் தேதி திறக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்து உள்ளார். இதற்கு முன்பு ஒருசில ஆண்டுகளில் மே மாதத்தில் பாசனத்துக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்படும் என்ற அறிவிப்புக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: முன் கூட்டியே தண்ணீர் திறப்பதால் டெல்டா மாவட்டங்களில் தற்போது நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகள் முழுமையடையாது.
மேட்டூர் அணையில் நீர் இருப்பு அதிகமாக உள்ளதாலும், முன்கூட்டியே திறக்கப்படுவதாலும் சாகுபடி பரப்பு அதிகரிக்கவும், மகசூல் கூடுதலாக கிடைக்கவும் வாய்ப்பு ஏற்படும். அக்டோபர் மாதத்தில் தொடங்கும் பருவமழையில் பயிர்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.
இருப்பினும், மற்ற துறைகள் தற்போது ஆயத்த நிலையில் இருக்கிறார்களா என்பதையும் பார்க்க வேண்டும். விதை, உரம் உள்ளிட்டவற்றின் தேவை ஒரேநேரத்தில் அதிகரிக்கும்போது, அவை தட்டுப்பாடின்றி வழங்க தயார்நிலையில் இருக்க வேண்டும். வேளாண், நீர்வளம், கூட்டுறவுத் துறைகளின் அரசு செயலர்கள் டெல்டா பகுதியில் மாவட்டங்கள்தோறும் வருகை தந்து, விவசாயிகளுடன் கலந்துரையாடி வேளாண் பணியை துரிதப்படுத்த வேண்டும். தண்ணீரை அனைத்துப் பகுதிகளுக்கும் முறைப்படுத்தி வழங்க மாவட்டந்தோறும் அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய குழுக்களை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்றார்.
210 நாட்களாக 100 அடிக்கும் குறையாமல்…
கடந்த ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99 அடியாக இருந்தது. அதன் பிறகு அக்டோபர் 25-ம் தேதி முதல் இன்று வரை 210 நாட்களாக அணையின் நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் உள்ளது. இதில் கடந்த நவம்பர் 14-ம் தேதி முதல் டிசம்பர் 23-ம் தேதி வரை, அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.