திருச்சி: தமிழகத்தில் இனி காவல்நிலைய மரணங்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என காவல் அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார்.
மத்திய மண்டல காவல்துறை, ‘வாய்ஸ் ஆப் வாய்ஸ்லெஸ்’ சங்கம் ஆகியவை சார்பில் காவல்நிலைய மரணங்களைத் தடுப்பது தொடர்பாக காவல் அதிகாரிகளுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.
திருச்சி மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன், மத்திய மண்டல ஐ.ஜி வே.பாலகிருஷ்ணன், தஞ்சை சரக டிஐஜி கயல்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி, தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் 350 பேர் பங்கேற்றனர்.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, காவல்நிலைய மரணங்களைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
முன்னதாக அவர் அளித்த பேட்டி: கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அளவில் 919 காவல்நிலைய மரணங்களும், தமிழகத்தில் 84 காவல்நிலைய மரணங்களும் நிகழ்ந்துள்ளன. தமிழகத்தில் கடந்த 2018-ல் மட்டும் 13 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 2019-ல் 11 ஆகவும், கடந்தாண்டில் 4 ஆகவும் குறைந்துள்ளது.
நிகழாண்டில் சென்னையில் ஒரு காவல்நிலைய மரணம் ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் இனி காவல்நிலைய மரணங்கள் இருக்கவே கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் காவல்துறையினரை தயார்படுத்துவதற்காக இப்பயிற்சி அளிக்கப்படுகிறது.
காவல்நிலைய மரணம் என்றால், காவலர்கள் தாக்குவதால் இறப்பதுமட்டுமல்ல. சிலர், காவல் நிலையங்களில் தற்கொலை செய்துகொள்வர். சிலர் விசாரணைக்கு வந்த சமயத்தில் உடல்நலக்குறைவால் இறந்துவிடுவர்.
எனவே, இதுபோன்ற நேரங்களில் காவலர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். இனி காவல்நிலைய மரணங்கள் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
காவலர்கள் தங்களை பிறர் தாக்கும்போது, தற்காப்புக்காக பலப்பிரயோகம் செய்யலாம். ஆனால் அது, தேவைக்கு அதிகமானதாக இருக்கக்கூடாது. பொதுமக்களுடன் காவலர்கள் எவ்வாறு பழக வேண்டும் என பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தேசிய மனநல மருத்துவமனையில் சான்றிதழ் படிப்பு முடித்த காவல்துறை அதிகாரிகள் 300 பேர் மூலம் தற்போது காவல்துறையிலுள்ள 1,13,000 பேருக்கு இதுபோன்ற பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கள்ளச்சாராயம் கட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே உள்ளது. அங்கொன்றும், இங்கொன்றுமாக சில இடங்களில் சாராய விற்பனை நடைபெறலாம். இதனை முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை அதிகரித்துள்ளதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி நேற்று முன்தினம் குற்றம்சாட்டியிருந்த நிலையில், டிஜிபி சைலேந்திரபாபு அதற்கு பதிலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசிய மனநல மருத்துவமனையில் சான்றிதழ் படிப்பு முடித்த காவல் துறை அதிகாரிகள் 300 பேர் மூலம் காவல் துறையிலுள்ள 1,13,000 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது