சர்வதேச சமூகத்தின் உதவியை பெற கூட்டு முயற்சி: இலங்கை தமிழ் எம்.பி திருச்சியில் பேட்டி

Sri lanka MP Radhakrishnan press meet speech at Trichy: ராஜபக்சே எடுத்த சர்வாதிகார முடிவுகளால் தான் இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது என இலங்கை தமிழ் எம்.பி., ராதாகிருஷ்ணன் திருச்சியில் பேட்டி அளித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்துள்ள கீரம்பூர் கிராமத்திலிருந்து செங்காட்டுப்பட்டி செல்லும் வழியில் உள்ள பிச்சாயி அம்மன் வீரப்ப சுவாமி கோவிலில் இலங்கை நுவரெலியா தொகுதி தமிழ் எம்.பி. ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

இலங்கையில் ராஜபக்சே அரசு கொண்டு வந்த 20-வது சட்ட திருத்தத்தினால் அனைத்து அதிகாரங்களும் பிரதமர் இடத்தில் குவிக்கப்பட்டது. அதன் காரணமாக ராஜபக்சே எடுத்த சர்வாதிகார முடிவுகளால் தான் இலங்கையின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது.

இதன் காரணமாக பெட்ரோல், டீசல், பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு இலங்கை வாழ் மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெறக்கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர். இலங்கையில் தற்சமயம் உள்ள நிலைமையை சரிசெய்ய இந்திய அரசும், தமிழக அரசும் போதுமான நிவாரண உதவிகளை செய்து வருவதற்கு இலங்கை மக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பிறகு தேர்தலில் வெற்றி பெற்ற ராஜபக்சே, அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார். அதன்பிறகு ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்கிற நோக்கில் மீண்டும் இனவாதத்தை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்று இலங்கை பிரதமராக பதவி ஏற்றார்.

ஆனால் இம்முறை இலங்கையில் உள்ள தமிழர்கள், சிங்களர்கள், முஸ்லிம்கள் ஆகிய மூவரும் ஓரணியில் நின்று ராஜபக்சே அரசை வீழ்த்த கடுமையான போராட்டங்களை செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: பேரறிவாளன் விடுதலையில் சோனியா குடும்பம் & ஸ்டாலினுக்கான மரியாதைக்கு இடையில் சிக்கி தவிக்கும் காங்கிரஸ்

மேலும் இலங்கையிலுள்ள 25 தமிழ் எம்.பி.க்கள் அனைவரும் ஒரே கருத்துடன் செயல்பட்டு, சர்வதேச சமூகத்தின் உதவியை பெறும் நோக்கில் நிலையான அரசு அமைக்க முயற்சிகள் மேற்கொள்வோம் என்று கூறினார்.

சமீபத்தில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்ததை வரவேற்பதாகவும் எம்.பி. ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

இலங்கை தமிழ் எம்.பி. ஒருவர் துறையூர் பகுதிக்கு வந்ததையடுத்து அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

க.சண்முகவடிவேல்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.