பெங்களூரு : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இம்முறை உத்தர பிரதேசத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.கர்நாடகாவில் அடுத்த மாதம் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில் பா.ஜ., போட்டியின்றி இரண்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க முடியும். இதில், கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வான மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவிக்காலம் முடிவதால், மீண்டும் இங்கிருந்தே தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகின.
ஆனால், கர்நாடகாவுக்கு இவர் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் செய்யவில்லை என, மாநில பா.ஜ.,வினர் மத்தியில் அதிருப்தி உள்ளது.இதற்கு முன்பும், துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடுவும் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கும் எதிர்ப்பு எழுந்ததால், வேறு மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதுபோல, தற்போது நிர்மலா சீதாராமனுக்கும் எதிர்ப்பு எழுந்துள்ளதால், அவரை கர்நாடகாவுக்கு பதில் உத்தர பிரதேசத்தில் இருந்து, ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்க மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.அதற்கு பதில் புது முகங்களுக்கு வாய்ப்பளிக்க மேலிடம் முடிவு செய்துள்ளது. அதன்படி, மாநில பா.ஜ., துணை தலைவரான நிர்மல் சுராணா மற்றும் மாநில மகளிர் அணி தலைவி கீதா விவேகானந்தா ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
Advertisement