சியோல்-” வட கொரியா என்ன செய்தாலும், அதை சமாளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்,” என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில் மூன்று நாள் பயணத்தின் முடிவில் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது வட கொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை சோதனை செய்வது குறித்து கேட்கப்பட்டது. அணு ஆயுத ஏவுகணை சோதனை நடத்தினால் அமெரிக்காவின் நிலை என்ன எனவும் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு, ”வட கொரியா என்ன செய்தாலும் அதை சமாளிக்க நாங்கள் தயாராக உள்ளோம்,” என, ஜோ பைடன் தெரிவித்தார்.
‘வட கொரிய அதிபர் கிம் ஜங் உன்னிடம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன’ என்ற கேள்விக்கு ”ஹலோ,” என ஒற்றை வரியில் பதில் அளித்தார் ஜோ பைடன். ஏற்கனவே ஒரு முறை அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிடம் இதே கேள்வி கேட்கப்பட்ட போது ‘நான் கிம் ஜங் உன் அன்பில் மயங்கி விட்டேன்’ என்றார். தென் கொரியாவின் ஹூண்டாய், சாம்சங் நிறுவனங்கள் அமெரிக்காவில் கார் மற்றும் ‘சிப்’ தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க உள்ளன.
இது தொடர்பாக அந்நிறுவன தலைவர்களுடன் பேசிய ஜோ பைடன், சியோலில்உள்ள சிப் தொழிற்சாலையை பார்வையிட்டார். ஓசன் விமான படை தளத்தில் அமெரிக்க, தென்கொரிய வீரர்களுடன் உரையாற்றினார். தென் கொரியாவில் இருந்து நேற்று புறப்பட்ட ஜோ பைடன், இன்று ஜப்பான் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளஉள்ளார்.
Advertisement