மூணாறில் பெய்து வரும் கன மழை மற்றும் வரும் 27-ம் தேதி பருவ மழையும் தொடர உள்ளதால் இந்த ஆண்டுக்கான கோடை சீசன் முன்னதாக முடிவடைந்துள்ளது.
குளிர்ந்த காலநிலை, பரவிக் கிடக்கும் பனி ஆகியவற்றால் தென்னகத்து காஷ்மீர் என மூணாறு அழைக்கப்படுகிறது. இந்த பருவநிலைக்காக உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கோடை காலத்தில் அதிகளவில் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து பல பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் மூணாறுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து இடுக்கி மாவட்ட சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் சார்பில் ரூ.100 கட்டணத்தில் தங்கும் வசதி, ரூ.250 கட்டணத்தில் மூணாறை சுற்றுப் பார்க்கும் வசதி, தாவரவியல் பூங்காவில் நுழைவுக் கட்டணத்தில் தள்ளுபடி உள்ளிட்ட பல சலுகைகளை அளித்தது.
இதனால் இந்த மாதத்தின் தொடக்கம் வரை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு புயல் காரணமாக மழை பெய்யத் தொடங்கியது. தற்போது குளிர் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாய் குறைந்துள்ளது.
இடுக்கி மாவட்டத்தில் 23-ம் தேதி வரை கனமழை நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் ஆற்றைக் கடக்கவோ, மீன்பிடிக்கவோ செல்லக்கூடாது என்று ஆட்சியர் ஷிபாஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். வரும் 27-ம் தேதி தென்மேற்குப் பருவ மழையும் தொடங்க உள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மூணாறு கோடை சீசன் முன்னதாகவே முடிவுக்கு வந்துள்ளது.