ஜெனீவா,
உலக சுகாதார அமைப்பின் 75-வது மாநாடு, ஜெனீவாவில் நடந்து வருகிறது. அதன் உயர்மட்ட தொடக்க அமர்வில் நேற்று விருதுகள் வழங்கும் விழா நடந்தது. உலக சுகாதாரத்துக்கு ஆற்றிய பணி, தலைமைப்பண்புடன் ஆற்றிய பணி, பிராந்திய சுகாதார பிரச்சினைகளுக்காக அர்ப்பணித்து பாடுபடுதல் ஆகியவற்றை கவுரவிக்கும்வகையில், உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ராஸ் ஆதனம் கிப்ரியசஸ் 6 விருதுகளை அறிவித்தார்.
இதில், இந்தியாவை சேர்ந்த 10 லட்சம் ‘ஆஷா’ தன்னார்வ பெண் தொண்டர்களுக்கு ஒரு விருது வழங்கப்பட்டது. கிராமப்புறங்களில் நேரடி மருத்துவ சேவை கிடைக்கவும், இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்தவும் சளைக்காமல் பணியாற்றியதற்காக இவ்விருது வழங்கப்பட்டது.
இவர்கள் கிராமப்புறங்களில் இந்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார பணியாளர்களாக செயல்பட்டு வருகிறார்கள். கொரோனா காலத்தில் கிராமப்புறங்களில் வீடு வீடாக சென்று நோயாளிகளை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். மகப்பேறு, குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துதல், காசநோய் ஒழிப்பு போன்ற பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.