புதுடெல்லி: குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவு மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்து பேசுகிறார்.
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் முதல் உச்சி மாநாடு, கடந்த ஆண்டு மார்ச்சில் நடந்தது. கரோனா பாதிப்பு காரணமாக அந்த மாநாடு காணொலி வாயிலாக நடத்தப்பட்டது. 2-வது உச்சி மாநாடு, கடந்த செட்பம்பரில் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்தது. இதில் 4 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
இந்நிலையில், குவாட் அமைப்பின் 3-வது உச்சி மாநாடு ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். குவாட் அமைப்பின் தலைவர்கள் நேரடி யாக கலந்து கொள்ளும் 2-வது உச்சி மாநாடு இது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டில் பங்கேற்க வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அப்பானீஸ் ஆகியோரை பிரதமர் மோடி தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளார். ரஷ்யா – உக்ரைன் போர் குறித்தும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் உட்பட பல்வேறு விஷங்கள் குறித்து குவாட் மாநாட்டில் தலைவர்கள் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. டோக்கியோ செல்லும் முன்பு பிரதமர் மோடி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குவாட் அமைப்பின் நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை, இந்த உச்சி மாநாடு வழங்கும். இந்தோ-பசிபிக் பகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த உலகளாவிய விஷயங்கள் குறித்தும் நாங்கள் ஆலோசிப்போம்.
ஜப்பானில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்துப் பேச உள்ளேன். அப்போது, அமெரிக்காவுடனான உறவு களை மேலும் பலப்படுத்துவது குறித்து ஆலோசிப்போம். ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோணி அல்பானீஸையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளேன். அப்போது, இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பன்முக ஒத்துழைப்பு, பாதுகாப்பில் கூட்டுறவு, இந்தோ-பசிபிக் பகுதியில் பகிரப்பட்ட முன்னுரிமைகளை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து நாங்கள் ஆலோசிப்போம்.
எனது டோக்கியோ பயணத்தின்போது, இந்தியா – ஜப்பான் இடையேயான கூட்டுறவை வலுப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை மேலும் தொடர்வதை எதிர்நோக்கியுள்ளேன். இரு நாடுகள் இடையேயான கூட்டுறவில், பொருளாதார ஒத்துழைப்பு முக்கியமான அம்சமாகும். கடந்த மார்ச் மாதம் இந்தியா – ஜப்பான் இடையேயான உச்சி மாநாடு நடந்தது. அப்போது, அடுத்த 5 ஆண்டுகளில், இந்தியாவில் ஜப்பானின் முதலீடு 5 டிரில்லியன் ஜப்பான் யென் அளவுக்கு இருக்க வேண்டும் என்று நானும், ஜப்பான் பிரதமர் கிஷிடாவும் அறிவித்தோம். இரு நாடுகள் இடையேயான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், ஜப்பான் தொழில் அதிபர்களை சந்தித்து பேசுவேன். ஜப்பானில், 40 ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். இரு நாடுகள் இடையேயான உறவில், இவர்கள் முக்கிய அங்கமாக உள்ளனர். அவர்களையும் சந்தித்து பேச உள்ளேன்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 40 மணி நேரத்தில் 23 நிகழ்ச்சிகள் பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் குறித்து, ஜப்பானுக்கான இந்திய தூதர் எஸ்.கே.வர்மா கூறியதாவது: குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க வரும் பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானில் சுமார் 40 மணி நேரம் தங்குகிறார். இதில் அமெரிக்க அதிபர் , ஆஸ்திரேலிய மற்றும் ஜப்பான் பிரதமர்களுடனான சந்திப்பு உட்பட மொத்தம் 23 நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். 35 நிறுவனங்களின் சி.இ.ஓ.க் களும் பிரதமர் மோடியை சந்தித்துப் பேச உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.