சென்னை: சென்னை மியூசிக் அகாடமியின் 96-வது ஆண்டு இசை விழாவை டிச.15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று அகாடமி தலைவர் என்.முரளி தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டோடு கடந்த 2 ஆண்டுகளுக்கும் சேர்த்து ‘சங்கீத கலாநிதி’ உள்ளிட்ட விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மியூசிக் அகாடமி தலைவர் என்.முரளி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சென்னை மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், மியூசிக் அகாடமியின் நிர்வாகக் குழு கூடி, நடப்பு ஆண்டோடு கடந்த 2 ஆண்டுகளுக்கும் சேர்த்து ‘சங்கீத கலாநிதி’ உள்ளிட்ட விருதுகளை வழங்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, ‘சங்கீத கலாநிதி’ விருதுக்கு கடந்த 2020-ம் ஆண்டுக்காக பிரபல கர்னாடக இசைப்பாடகர் நெய்வேலி ஆர்.சந்தான கோபாலனும், 2021-ம் ஆண்டுக்காக பிரபல மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவத்சலமும், 2022-ம் ஆண்டுக்காக பிரபல வயலின் கலைஞர்கள் லால்குடி ஜிஜேஆர் கிருஷ்ணன், ஜிஜேஆர் விஜயலஷ்மி ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல, ‘சங்கீத கலா ஆச்சார்யா’ விருதுக்கு நாகஸ்வரம் வித்வான் கீவளூர் என்.ஜி. கணேசன் (2020), கர்னாடக இசைப்பாடகியும், இசை அறிஞருமான ரீதா ராஜன் (2021), இசை அறிஞர் ஆர்.எஸ்.ஜெயலஷ்மி (2022) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.‘டிடிகே’ விருதுக்கு கர்னாடக இசைப் பாடகர் தாமரைக்காடு கோவிந்தன் நம்பூதிரி (2020), மிருதங்கம், ஜலதரங்கம் வித்வான் சோமயாஜுலு (2021), கஞ்சிராவித்வான் ஏ.வி.ஆனந்த் (2022) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ‘இசை அறிஞர்’ விருதுக்கு வி.பிரேமலதா (2022) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
டிச.15-ம் தேதி நடக்கும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின்சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மியூசிக் அகாடமியின் 96-வது ஆண்டு இசை மற்றும் சதஸ் நிகழ்ச்சிகளை தொடங்கிவைக்க உள்ளார்.
அன்று தொடங்கி, 2023 ஜன.1-ம் தேதி வரை மியூசிக் அகாடமியின் இசை விழா நடைபெறும். 2023 ஜன.3 முதல் 9-ம் தேதி வரை மியூசிக் அகாடமி நடனத் திருவிழா நடைபெறும். மியூசிக் அகாடமியின் ‘நிருத்ய கலாநிதி’ விருதுக்கு ரமா வைத்தியநாதன் (2020), நர்த்தகி நடராஜ் (2021), பிரஹா பெஸல் (2022) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.