98 கிலோ எடையை குறைத்த பிறகு உற்சாகமாகவும், புத்துணர்ச்சியாகவும் உள்ளதாக நடன இயக்குனர் மற்றும் நடிகர் கணேஷ் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
உடல் எடை குறைப்பிற்கு பின்னர் பேசிய கணேஷ் ஆச்சார்யா, “98 கிலோ எடையை குறைத்த பிறகு நான் உண்மையில் சுறுசுறுப்பாக உணர்ந்தேன், மேலும் இப்போது செய்யும் அனைத்து வேலைகளுமே சுறுசுறுப்பாக உள்ளது. அதிக அளவிலான வேலைகளை மேற்கொள்வதற்கும், நடிப்பைத் தொடரவும் இது சிறந்த காலகட்டமாக உள்ளது. பிட்னெசான உடற்தகுதியுடன் இருப்பது என் வாழ்வில் நிறைய விஷயங்களை மாற்றியுள்ளது” என்கிறார்
பல மொழிகளில் பணியாற்றும் தேசிய விருதுபெற்ற பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா, நடனத்தில் மட்டுமின்றி அவ்வப்போது நடிப்பிலும் அசத்தி வருகிறார்.
இது தொடர்பாக பேசிய அவர்,“நடனத்திற்குத்தான் எப்போதும் முன்னுரிமை கொடுப்பேன், அவ்வப்போது நடிக்கவும் செய்வேன். நடன இயக்கத்தின்போது ஒருபோதும் பின் இருக்கையில் உட்கார முடியாது. தொழில் மீதான எனது பக்தி என்னை இன்றைய நிலைக்கு உருவாக்கியது. இல்லையெனில், ஒரு இளைஞன் எப்படி இவ்வளவு தூரம் வர முடியும்? கொரோனா கட்டுப்பாடுகள் குறைந்த பிறகு தொழில்துறை மீண்டும் வேகமாக இயங்கத் தொடங்கியுள்ளது. இதனால் இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் பல பெரிய திரைப்படங்கள் வரிசையாக உள்ளன” என தெரிவித்தார்.
அடுத்ததாக இவர் நாயகனாக நடித்த தேஹாட்டி டிஸ்கோ என்ற படம் வெளியாகவுள்ளது. மேலும், ஓ மை காட் 2, பிரம்மாஸ்திரா, ராம் சேது மற்றும் ஷாருக்கானுடன் ராஜு ஹிரானி படம் போன்ற ஏராளமான திரைப்படங்களுக்கு இவர் நடனம் அமைத்து வருகிறார்.