“சென்னையில் முதல் கட்டமாக 500 மின்சாரப் பேருந்துகள்" – அமைச்சர் சிவசங்கர்

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கோவை சாலையில் அமைந்துள்ள தனியார் அரங்கில், தி.மு.க சார்பில் திராவிட பாசறை பயிலரங்கம் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், எம்.பி அப்துல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேட்டியளிக்கும் சிவசங்கர்

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எஸ்.சிவசங்கர், “இந்தியாவில் திராவிட சித்தாந்தம் தற்போது எந்த வகையில் தேவை என்பதை எடுத்துரைக்கும் விதமாகவும், இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு திராவிட சித்தாந்தத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த பயிலரங்கு நடைபெற்றது. திராவிடம் எந்த புள்ளியில் தொடங்கி, எந்த புள்ளியில் பயணிக்கிறது என்பது குறித்தும், திராவிடத்தின் மைய நாடியாக உள்ள சமூக நீதி கொள்கை மூலம் தமிழகம் சீரான வளர்ச்சி பாதையில் செல்வதோடு, எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பெற்ற மாநிலமாக உருவாகி இருக்கிறது. இந்திய அளவில் தமிழ்நாடு பொருளாதார நிலையில் திராவிட கொள்கையால் எப்படி வளர்ச்சி பெற்றுள்ளது என்பது குறித்து பயிலரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, ‘தி.மு.க தேர்தல் வாக்குறுதியாக சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைப்பதாக கூறி இருந்தனர். இன்னும் 72 மணி நேரத்திற்குள் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதபட்சத்தில், தலைமைச் செயலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்’ என்று தெரிவித்திருப்பது குறித்து நீங்கள் கருத்து கேட்கிறீர்கள். சிலிண்டருக்கு ஏற்கனவே மத்திய அரசு கொடுத்து வந்த மானியத்தை முழுமையாக கொடுக்கவில்லை. பிரதமர் கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை.

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர்

தேர்தலுக்கு முன் வெளி நாட்டில் இருக்கக்கூடிய கருப்பு பணத்தை மீட்டு, பொதுமக்கள் வங்கி கணக்கில் தலா ரூ. 15 லட்சம் செலுத்தப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார். பெட்ரோல், டீசல் விலை காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட, பா.ஜ.க ஆட்சியில் அதிகளவு உயர்த்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் தேவையில்லாமல் மக்கள் மீது சுமத்தப்பட்ட சுமை. இவற்றையெல்லாம் முழுமையாக குறைக்காமல், மத்திய அரசு ஏற்றி வைத்துள்ள விலையை, மாநில அரசுகளுக்கு வரக்கூடிய வருவாயை இழந்து விலையை குறைக்க வேண்டும் என்று சொல்வது, தேவையற்ற வாதம். பேருந்து கட்டணம் உயராது என்று தமிழக முதல்வர் உறுதி அளித்துள்ளார். அதேபோல், சென்னையில் முதல் கட்டமாக 500 மின்சாரப் (பேட்டரி) பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன் சேவை, மக்களுடைய பயன்பாட்டைப் பொறுத்து, அடுத்த கட்டமாக தமிழகம் முழுவதும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதற்கான கட்டமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.