'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது – முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா

‘மதரஸா’ என்ற வார்த்தையே இருக்கக் கூடாது என்று அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம் குழந்தைகளுக்கு கல்வியை போதிக்கும் மதரஸாக்களை சாதாரண பள்ளிக்கூடங்களாக மாற்ற, அசாமில் ஆளும் பாஜக அரசு கடந்த 2020-ம் ஆண்டு முடிவெடுத்தது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதரஸா நிர்வாகங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. எனினும், அரசுக்கு சாதகமாகவே நீதிமன்றம் நடப்பாண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, அம்மாநிலத்தில் உள்ள மதரஸாக்கள், பள்ளிக்கூடங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
image
இந்நிலையில், குவாஹாட்டி நகரில் கல்வி தொடர்பான மாநாடு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா பேசியதாவது:
‘மதரஸா’ என்ற வார்த்தை இருக்கும் வரையில் குழந்தைகளால் தாங்கள் மருத்துவராகவோ, பொறியாளர்களாகவோ வர வேண்டும் என நினைக்க முடியாது. இந்த விஷயம் அந்தக் குழந்தைகளுக்கு தெரியவந்தாலே போதும். அவர்களே மதரஸாக்களுக்கு செல்ல மாட்டோம் எனக் கூறி விடுவார்கள். உங்கள் (முஸ்லிம்கள்) குழந்தைகளுக்கு குரானை போதியுங்கள். யாரும் அதை தடுக்கப் போவதில்லை. ஆனால் அதை உங்கள் வீட்டில் வைத்து செய்யுங்கள்.
image
பள்ளிக்கூடங்களில் மதம் சார்ந்த படிப்புகளுக்கு இடம் கிடையாது.. இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட பாடங்கள் மட்டுமே பள்ளிகளில் போதிக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான், மாணவர்கள் மருத்துவராகவோ, பொறியாளராகவோ, விஞ்ஞானியாகவோ உருவாக முடியும். எனவே ‘மதரஸா’ என்ற வார்த்தையையே முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
அனைவரும் இந்துக்களே…
மதரஸாக்களில் பயிலும் குழந்தைகள், குரானை எளிதில் மனப்பாடம் செய்யும் அளவுக்கு திறமை வாய்ந்தவர்களாக இருப்பதாக சிலர் கூறுகின்றனர். அவர்களுக்கு ஒன்றினை கூறிக்கொள்கிறேன். இந்தியாவில் அனைத்து முஸ்லிம்களும் இந்துக்கள்தான். இந்தியாவில் எவரும் முஸ்லிமாக பிறப்பதில்லை. இந்துக்களாகவே பிறந்திருக்கிறார்கள். எனவே திறமையான முஸ்லிம் குழந்தை இருந்தால், அதற்கு அக்குழந்தையின் இந்து பூர்வீகமே காரணம் என நான் கருதுகிறேன். இவ்வாறு ஹிமந்த விஸ்வ சர்மா பேசினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.