சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து ₹4 லட்சம் பீர் பாட்டில்களை அள்ளிச்சென்ற குடிமகன்கள்-ஆந்திராவில் பரபரப்பு

திருமலை : ஆந்திராவில் பீர் பாட்டில்கள் ஏற்றிச் சென்ற சரக்கு லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சாலையில் சிதறி கிடந்த ₹4 லட்சம் பீர்பாட்டில்களை குடிமகன்கள் போட்டி போட்டு அள்ளிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளத்தில் இருந்து சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளிக்கு பீர் பாட்டில்கள் ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு லாரி நேற்று சென்றுக்கொண்டிருந்தது. பிரகாசம் மாவட்டம் சிங்கரயகொண்டா தேசிய நெடுஞ்சாலையில், வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பீர் பாட்டில்கள் அனைத்தும் சாலையில்  சிதறியது.இதற்கிடையே பீர் பாட்டில் ஏற்றி சென்ற சரக்கு லாரி விபத்துக்குள்ளானது குறித்து அறிந்த குடிமகன்கள் அங்கு குவிந்தனர். தொடர்ந்து, சாலையில் சிதறிக்கிடந்த பீர் பாட்டில்களை போட்டி போட்டு கிடைத்ததை அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மொத்தம் ₹4 லட்சம் மதிப்புள்ள பீர் பாட்டில்களை குடிமகன்கள் அள்ளிச் சென்றதாக கூறப்படுகிறது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார் சாலையில் உடைந்தும், சிதறிக்கிடந்த பீர் பாட்டில்களையும் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி சாலையோர கால்வாயில் கொட்டினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.