கோவா மாநிலத்தில் போர்ச்சுகீசியர்களால் சேதப்படுத்தப்பட்ட கோயில்களை புனரமைக்க வேண்டும் என்று கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
கியான்வாபி மசூதி சர்ச்சை எழுந்துள்ள நிலையில் கோவா முதல்வர் ‘தங்கள் மாநிலத்தில் போர்த்துகீசியர்களால் இடிக்கப்பட்ட கோயில்களை புனரமைக்க வேண்டும்’ என அழைப்பு விடுத்துள்ளார். மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து பேசிய கோவா முதல்வர், “போர்த்துகீசியர்களால் சேதப்படுத்தப்பட்ட கோயில்கள் புனரமைக்கப்பட வேண்டும். இன்றுவரை, கோவாவுக்கு சுற்றுலாப் பயணிகள் கடற்கரைகளுக்காக மட்டுமே ஈர்க்கப்படுகின்றனர், ஆனால் இப்போது அவற்றை கோயில்களுக்கு கொண்டு வருவது எங்கள் கடமை” என்று கூறினார்.
கோயில்களை புனரமைப்பதற்கு பட்ஜெட்டில் இருந்து ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் பிரமோத் சாவந்த் தெரிவித்தார். மேலும், “கோவா விடுதலைக்குப் பிறகு ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை பின்பற்றி வருகிறது என்பதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மற்ற மாநிலங்களும் இதை அமல்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன், 60 ஆண்டுகளாக மற்ற கட்சி ஆட்சிகளில் கோவாவால் சாதிக்க முடியாததை, 2012 முதல் 2022 வரை பாஜக ஆட்சியில் நாங்கள் சாதித்துள்ளோம், விரைவில் அது சிறந்த மாநிலங்களில் ஒன்றாக மாறும்” என்று கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM