குறுவை சாகுபடி | 3675 மெ.டன் விதைகள்,  56,229 மெ.டன் உரங்கள் இருப்பு உள்ளன – உழவர் நலத்துறை

சென்னை: குறுவை சாகுபடி ஆயத்தப் பணிக்காக 3,675 மெட்ரிக் டன் விதைகளும், 56,229 மெட்ரிக் டன் ரசாயன உரங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக உழவர் நலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறுவை சாகுபடிக்காக நாளை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இதையொட்டி, குறுவை சாகுபடிக்கான ஆயத்தநிலை தொடர்பாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில், “நடவுப்பணி மேற்கொள்ள ஏதுவாக நல் முளைப்புத் திறன் உள்ள நெல் விதைகளை இருப்பு வைக்க வேண்டும், விதை ஆய்வு பணிகளை துரிதப்படுத்த வேண்டும், வேளாண் பொறியியல் துறை மூலம் தூர்வாரப்படும் வாய்க்கால் பணிகளை துரிதப்படுத்தி கடைமடை வரை தண்ணீர் சென்று சேர்வதை உறுதிபடுத்திட வேண்டும். குறுவை சாகுபடிக்கு தேவையான வேளாண் இயந்திரங்களான தயார் நிலையில் வைத்திக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, குறுவை சாகுபடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை குறித்து அமைச்சர் கூறுகையில், “நடப்பு குறுவை பருவத்திற்கு தேவையான குறுகிய கால நெல் சன்ன ரகங்களின் விதைகளை தேவையான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் தனியார் கடைகளிலும் இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேளாண்மைத் துறை மூலம் டெல்டா மாவட்டங்களில் 1,609 மெட்ரிக் டன் விநியோகம் செய்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 539 மெட்ரிக் டன் விற்பனை செய்து 1,111 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. தனியார் கடைகள் மூலம் 1,955 மெ.டன் விநியோகம் செய்யப்பட்டு 2,564 மெ.டன் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அவற்றின் முளைப்புத்திறனை விதைச்சான்றளிப்பு துறை மூலம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுவை பருவத்திற்கு தேவையான யூரியா, டிஏபி போன்ற உரங்கள் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலும் போதிய அளவு இருப்பு வைத்து அவற்றின் விற்பனையையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுவை பருவத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள 66,000 ஏக்கர் மாற்றுப்பயிர் சாகுபடியை ஊக்குவித்திடவும் உரிய விவசாயிகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான விதைகள் மற்றும் இதர வேளாண் இடுபொருட்களை விநியோகம் செய்திட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நீர்வளத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து கால்வாய் தூர்வாரும் பணிகளை நல்ல முறையில் செய்திட உரிய ஊக்கமும் ஆக்கமும் அளிப்பதோடு அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து இதுவரை இல்லாத அளவு கூடுதல் குறுவை சாகுபடி பரப்பு எய்திட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.