சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கலப்பட எரிபொருள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், கலப்பட எரிபொருள் குறித்த ரகசியத் தகவல் குற்றப் புலனாய்வுத்துறை போலீஸாருக்கு கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
தனிப்படை போலீஸார் அம்பத்தூர், பட்டரைவாக்கம், திருநின்றவூர் பகுதிகளில் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், மேற்குறிப்பிடப்பட்ட பகுதிகளிலுள்ள கிடங்குகளில் தகுந்த ஆவணங்கள் எதுவும் இல்லாமல் கலப்படம் செய்யப்பட்ட எரிபொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
அதையடுத்து, கலப்படம் செய்யப்பட்ட 18,200 லிட்டர் ஆயில், 1,100 லிட்டர் பெட்ரோல், 200 லிட்டர் டீசலை போலீஸார் கைப்பற்றினர். மேலும், கலப்பட எரிபொருளை பதுக்கி வைத்திருந்த மைக்கேல் சூசை, ஜான்சன் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, இவர்கள் இருவரும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், சென்னை புறநகர்ப் பகுதிகளில் காவல்துறையினர் தொடர் சோதனை நடத்திவருகிறார்கள். சட்டவிரோதமாகக் கிடங்குகள் செயல்படுவது தெரிந்தாலும், கலப்படம் செய்து எரிபொருள்கள் விற்பனை செய்வது தெரிந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.