வேக வேகமாக தூர்வாரும் பணிகள்: மே 27-ம் தேதி கல்லணை திறப்பு உறுதி!

எஸ்.இர்ஷாத் அஹமது, தஞ்சாவூர்

குறுவைப் பாசனத்திற்காக கல்லணையிலிருந்து மே 27-ம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாசன ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்களைத் தூர் வாரும் பணிகள், போர்க்கால அடிப்படையில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

மேட்டூர் அணையிலிருந்து மே 24-ம் தேதி திறந்து விடப்படும் நீர் அதற்கடுத்த மூன்று தினங்களில் கல்லணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில்  குறுவைப் பாசனத்திற்காக கல்லணையிலிருந்து மே 27-ம் தேதி  தண்ணீர் திறந்துவிடப்படும் எனத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, தற்போது கல்லணையில் ரூ.20 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.  கொள்ளிடம் ஆற்றில் 30 புதிய மதகுகள் அமைக்கும் பணிகளும், கல்லணைக் கால்வாய், வெண்ணாறு ஆகியவற்றில் மதகுகள் பழுது நீக்கும் பணிகளும்  இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

அதேபோல, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசன வாய்க்கால்கள், மழைநீர் வடிகால்கள் ஆகியவற்றைத் தூர் வாரும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வழக்கமாக ஜுன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில், இந்த ஆண்டு கர்நாடக அணைகளில் இருந்து வரும் தண்ணீரின் வரத்து அதிகமாக உள்ளதால், மேட்டூர் அணையில் இருந்து  முன்கூட்டியே அதாவது மே 24-ம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

இந்த எதிர்பாராத திடீர் திருப்பத்தால் இம்மாத இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டிருந்த தூர்வாரும் பணிகள் தற்போது ‘அவசர கதியில்’ மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனால் அப்பணிகளின் தரம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆனால் அக்குற்றச்சாட்டை நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் மறுக்கின்றனர்.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பாசன ஏரிகள் மற்றும் வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன. மீதமுள்ள ஒருசில இடங்கிளிலும் தூர்வாரும் பணிகள் தற்போது போர்க்கால அடிப்படையில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அவை இன்னும் ஓரிரு நாட்களில் முடிக்கப்படும் என்று நீர்வளத்துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் எஸ்.இராமமூர்த்தி கூறினார்.

மழைநீர் வடிகால்களைத் தூர்வாரும் பணிகள் தான் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை. அவற்றை மழைக் காலத்திற்குள் முடிக்க வேண்டும். அதற்கு இன்னும் போதுமான கால அவகாசம் உள்ளது என்று அவர் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.