பெட்ரோல்-டீசல் விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும்- பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள பாரதிய ஜனதா அலுவலகத்தில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் 1982-ம் ஆண்டு மதரீதியான கலவரத்தால் ஏற்பட்ட வடுவை ஆறவைக்க கடந்த 40 ஆண்டுகளாக முயற்சி செய்து வருகிறோம். மதம், சாதி மற்றும் அரசியல் ரீதியாக மீண்டும் பிரச்சினை ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக உள்ளோம்.
ஆனால் துரதிர்ஷ்ட வசமாக சில சம்பவங்கள் குமரி மாவட்டத்தில் மீண்டும் ஒரு பிரச்சனையை உருவாக்க தூண்டுகோலாக அமைந்து விடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
கடந்த 19-ந் தேதி இரவு 10 மணிக்கு சில சாதாரண பிரச்சினையில் ஒரு தம்பதியர் தாக்கப்பட்டுள்ளனர். பிரச்சினயைில் சமரசம் செய்ய முயன்ற வரும் தாக்கப்பட்டுள்ளார்.
இந்த விஷயத்தில் போலீசார் முறையாக நடக்கவில்லை. இதை வைத்து பார்க்கும்போது குமரி மாவட்டத்தில் மீண்டும் ஒரு கலவரத்தை தூண்டும் வகையில் போலீசார் செயல்படுவது போல தெரிகிறது. போலீசார் தங்களது கடமையை சரியாக செய்ய வேண்டும்.
முதல்-அமைச்சர் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை(24-ந்தேதி) திங்கள்சந்தையில் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்துள்ளது. தமிழகத்தில் பெட்ரோல் விலையில் 5 ரூபாய் குறைப்பதாக சொன்னது தி.மு.க. தான். தேர்தல் அறிக்கையில் கூறியபடி விலையை தமிழக அரசு குறைக்க வேண்டும்.
பேரறிவாளனை கோர்ட்டு விடுதலை செய்தது. ஆனால் அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டி அணைத்து உள்ளார். அவர் என்ன செய்கிறார் என்பதை உணர்ந்து தான் செய்கிறாரா? என்று தெரிய வில்லை. பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் ஏன் போராட்டம் நடத்தவில்லை. தி.மு.க.வுக்கு எதிராக பேசிவரும் அண்ணாமலை வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் போகும் என்று ஒரு அமைச்சர் சொல்லி இருப்பதாக தெரிகிறது.அந்த அமைச்சருக்கும் வீடு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தர்மராஜ், மாநிலச் செயலாளர் மீனாதேவ், பொருளாளர் முத்துராமன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.