குவாஹாட்டி: போலீஸ் நிலையத்துக்கு தீ வைத்த 5 பேரின் வீடுகளை அசாம் மாநில அரசு அதிகாரிகள் இடித்துத் தள்ளினர்.
அசாம் மாநிலத்தின் நகோவான்மாவட்டம் பதட்ரவா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் மீன் வியாபாரி சபிக்குல் இஸ்லாம் (39). நேற்றுமுன்தினம் சபிக்குல் இஸ்லாம் அப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த போலீஸார் ரூ.10 ஆயிரம் லஞ்சமும், வாத்தும் கேட்டதாகத் தெரிகிறது.
அதற்கு அவர் தர மறுக்கவே போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அடித்ததாகத் தெரிகிறது. இதனால் காயமடைந்த இஸ்லாம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று உயிரிழந்தார். சம்பவம் அறிந்த சபிக்குல் இஸ்லாமின் குடும்பத்தார் நேற்று பிற்பகல் பதட்ரவா போலீஸ் நிலையத்துக்கு வந்து ஸ்டேஷனை தீவைத்து எரித்தனர்.
சபிக்குல் இஸ்லாம் சாலையில் மயங்கி விழுந்திருந்ததாகவும், அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் அவரது மனைவியிடம் நல்ல நிலையில் ஒப்படைத்ததாகவும் போலீஸ் டிஜிபி பாஸ்கர் ஜோதி மகந்தா தெரிவித்தார்.
இந்நிலையில் போலீஸ் நிலையத்தை தீவைத்து எரித்த 5 பேரின் வீடுகளை நேற்று மாவட்ட நிர்வாக அதிகாரிகள் புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளினர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த வீடுகள் சட்டவிரோதமாக அங்கு கட்டப்பட்டிருந்ததால் அவற்றை இடித்ததாகத் தெரிவித்தனர். இதனிடையே
போலீஸ் நிலையத்தை எரித்த வழக்கில் 3 பேர் கைதாகி யுள்ளனர்.