புதுடெல்லி: சட்டவிரோத கைது மற்றும் சிறையில் கொடுமை புகார் கூறிய பெண் எம்பி நவ்நீத் ராணா, நாடாளுமன்ற சிறப்பு உரிமை குழு முன் இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார். சிவசேனா தலைவரும், மகாராஷ்டிர முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் இல்லமான மாடோக்கு வெளியே ஹனுமான் சாலிசாவை பாடப் போவதாக கூறிய அமராவதி தொகுதி சுயேச்சை எம்பியும், முன்னாள் நடிகையுமான நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவரான சுயேச்சை எம்எல்ஏ ரவி ராணா ஆகியோர் கடந்த ஏப்ரல் 23ம் தேதி மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் கடந்த மே 5ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தனர். அதன்பிறகு டெல்லி சென்ற தம்பதியினர், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்தித்தனர். அப்போது எம்பி நவ்நீத் ராணா தரப்பில், ‘சிறையில் அடைக்கப்படும் முன்பாக மும்பை காவல்துறையினர் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். என்னை சட்டவிரோதமாக கைது செய்தனர். சிறையில் எனக்கு எதிராக கொடுமைகள் நடந்தன. எனவே நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரினார். அதையடுத்து சிறப்புரிமை குழுவின் விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று எம்பி நவ்நீத் ராணா, சிறப்பு உரிமைக் குழுவின் ஆஜராகி, தன்னை போலீஸ் சட்டவிரோதமாக கைது செய்தது மற்றும் சிறையில் நடந்த கொடுமைகள் குறித்து விளக்கமளிக்கிறார். டெல்லியில் உள்ள பார்லிமென்ட் ஹவுஸ் அனெக்ஸ் கட்டிடத்தில் இன்று மாலை ஆஜராகும் நவ்நீத் ராணா, வாய்மொழி மூலமாகவும், எழுத்து பூர்வமாகவும் தனது வாக்குமூலத்தை தெரிவிக்கவுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.