பிரபலமான படத்தை வேற்றுமொழியில் ரீமேக் செய்வது புதுசான விஷயமல்ல! ஆனால், ‘காதல் கோட்டை’ படத்துக்கே கொஞ்சம் வேறு மாதிரி சட்டை மாட்டி தமிழ் ஸ்க்ரீனுக்கே மறுபடியும் கொண்டு வந்திருப்பதுதான் லேசாக நெருடுகிறது! ஹீரோயின் கவுசல்யாவுக்குத் தான் காதலிக்கும் ஹீரோ முரளியைத் தெரியும். ஹீரோ அடிக்கடி போனில் இவர் குரலைக் கேட்டுத் தவிப்பதோடு சரி… ‘அந்தக் குரல் என்னை உருக வைக்கிறது’ என்கிறார் முரளி. முரளியின் மூச்சு அடங்குகிற அளவுக்கு நிலைமை முற்றிவிட்ட பிறகு மறைந்து மறைந்து வேடிக்கை பார்த்த கவுசல்யா கடைசியாக வந்து கதறுவதற்கு ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். கவுசல்யாவின் அப்பா நாசர் வருகிற அந்த சில நிமிடக்காட்சியில் ரொம்ப ரொம்ப ரொம்ப உன்னிப்பாகக் கவனித்துக் காதைத் தீட்டிக்கொண்டு கேட்டால் மட்டுமே புரிகிற குழப்பமான, பலவீனமான காரணம்.
ஈரம் தேங்கிய உதடுகளும் பிரகாசமான அகலக் கண்களுமாக கவுசல்யா உயிரோட்டமுள்ள ஹீரோயின்! இன்னும் கொஞ்சம் உடம்பைத் தேற்றிக் கொள்ளலாம்.தங்கர்பச்சான் காமிரா நகரத்து நடமாட்டங்களை இயல்புடன் வாங்கிக் கொடுத்திருக்கிறது. அதேசமயம், சில இடங்களில் ஃபோகஸ் சரியில்லாமல் ‘டபுள்’ அடித்துக் கண் வலிக்கவும் செய்கிறது. ஏன்?!இத்தனையையும் மீறிப் படம் காப்பாற்றப்பட்டுவிடுகிறது என்பதும் உண்மை. காரணம் – கதாபாத்திரங்கள் ‘சினிமாடிக்’காக இல்லாமல் அன்றாடம் பார்க்கிற பல முகங்களை நமக்கு நினைவுப்படுத்துவதுதான். அதற்கும் மேலாக, அடித்துப் புரண்டு சிரிக்க வைக்கிற விவேக் கடைசிவரை நம்மை ‘ஃப்ரெஷ்’ஷாக வைத்திருக்கிறார்.
– விகடன் விமர்சனக்குழு
(02.03.1997 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து…)
யூ ஆர் ரைட், பச்சான்!
விகடன் 2.3.97 இதழில் `காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தின் விமரிசனத்தில் `சில இடங்களில் ஃபோகஸ் சரியில்லாமல் காமிரா `டபுள்’ அடித்துக் கண்வலிக்கவும் செய்கிறது. ஏன்..?’ என்ற வரிகள் படம் முழுவதும் – தனித்தன்மையுடன் கையாண்டிருக்கும் காமிராமேன் தங்கர்பச்சான் மனதைப் புண்படுத்தியிருப்பது, அவர் நமக்கு எழுதிய ஒரு கடிதத்திலிருந்து தெரியவருகிறது. மீண்டும் ஒரு முறை சென்று படம் பார்த்தபோது, அப்படியெல்லாம் தவறாக எதுவும் கண்ணில் படவில்லை. முதலில் படத்தைப் பார்த்த அன்று, திரையில் ஏனோ ஓரிரு ஸீன்களில் தெளிவின்மை கண்ணுக்குப் பட… அதைச் சொல்ல நினைக்க ஒளிப்பதிவாளரைக் குறை கூறுவது போல் `ஃபோகஸ் சரியில்லாமல்…’ என்று வரிகளைப் பயன்படுத்திவிட்டது தவறுதான். அதற்கு மிகவும் வருந்துகிறோம். எச்சரிக்கையோடு வார்த்தைகளைக் கையாள, இந்தச் சம்பவத்தை ஒரு பாடமாகத்தான் நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். ஸாரி, பச்சான்!
– விகடன் விமர்சனக்குழு