‘ஜெய்பீம்’ இயக்குநருடன் மீண்டும் கூட்டணி அமைக்கும் சூர்யா – வெளியான தகவல்

வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ திரைப்படம் தாமதத்தால், மீண்டும் ‘ஜெய்பீம்’ இயக்குநருடன், நடிகர் சூர்யா கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக நிலவி வந்த கொரோனா சூழ்நிலை காரணமாக, உண்மை சம்பவங்களை அடிப்டையாகக் கொண்டு, நடிகர் சூர்யாவின் நடிப்பில் நேரடியாக ஓடிடியில் வெளியான ‘சூரரைப் போற்று’, ‘ஜெய்பீம்’ ஆகிய 2 படங்களுமே மாபெரும் வரவேற்பு பெற்றன. கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்து, கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’.

இந்தப் படம் விமர்சனரீதியாக பாராட்டைப்பெற்ற நிலையில், அடுத்ததாக சுமார் 19 வருடங்களுக்குப் பிறகு இயக்குநர் பாலாவுடன், நடிகர் சூர்யா கூட்டணி அமைத்திருந்தார். ‘சூர்யா41’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில், மீனவர் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடந்துமுடிந்துள்ளநிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற உள்ளது. இதற்கிடையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் நடிகர் சூர்யா சிறப்புத் தோற்றத்தில் வரவுள்ளார். இந்தப் படம் ஜூன் 3-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

image

மேலும், பாலாவின் படப்பிடிப்பு முடிந்ததும், இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில், காளையை அடக்கும் வீரராக சூர்யா வருகிறார். இதற்காக டெஸ்ட் சூட்டும் நடத்தப்பட்டது. இதற்கிடையில் மிக நீண்டகாலமாக சூரி, விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பை முடிக்கும் வகையில் வெற்றிமாறன் தற்போது முழுவீச்சில் களமிறங்கியுள்ளார். அதன்படி, சிறுமலையில் நடக்கும் படப்பிடிப்பின் புகைப்படங்களும் வெளியாகின.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்துவருவதாலும், ‘வாடிவாசல்’ படத்தின் ப்ரீ புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வருவதாலும், ‘வாடிவாசல்’ படத்தை வெற்றிமாறன் துவங்க காலதாமதம் ஆகும் எனக் கூறப்படுகிறது. இதனால் ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ. ஞானவேலுடன், நடிகர் சூர்யா மீண்டும் கைகோர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.