பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு வருகிற 30-ந்தேதி 8-வது ஆண்டை நிறைவு செய்ய உள்ளது. எனவே 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு இப்போதே அந்த கட்சி தயாராக தொடங்கி இருக்கிறது.
அதற்கு முன்னதாக அதாவது அடுத்த 2 ஆண்டுகளில் 11 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என்று முக்கியமான மாநிலங்கள் தேர்தலை சந்திக்கின்றன.
இதை கருத்தில் கொண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் பல அதிரடி முடிவுகளை மூத்த தலைவர்கள் எடுத்து உள்ளனர்.
முதல்கட்டமாக உத்தர பிரதேசத்தில் சமூக வலை தளங்களில் நன்கு பயிற்சி பெற்ற 10 ஆயிரம் பேரை களம் இறக்கி உள்ளனர். இதே போன்று மற்ற மாநிலங்களிலும் சமூக வலைதளங்களில் பலரை பயிற்சி அளித்து பா.ஜ.க.வின் அடிமட்டததை வலுப்படுத்த ஓசையின்றி ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே பா.ஜனதா ஆட்சி மூலம் கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு பலன்களை அனுபவித்து வரும் 100 கோடி பயனாளிகளை அடையாளம் கண்டு பட்டியலிட்டுள்ளனர்.
இந்த 100 கோடி பேரையும் பா.ஜ.க. நிர்வாகிகள் சந்தித்து பேச வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பா.ஜ.க. நிர்வாகிகள் வீடு, வீடாக கதவை தட்டி பா.ஜ.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கி சொல்லப் போகிறார்கள்.