இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பின் 3ஆவது உச்சி மாநாடு ஜப்பானின் டோக்கியோ நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு
ஜப்பான்
பிரதமர் ஃபுமியோ கிஷிடா அழைப்பு விடுத்திருந்தார்.
இதனையேற்று குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக
பிரதமர் மோடி
நேற்று மாலை ஜப்பான் புறப்பட்டுச் சென்றார். குவாட் அமைப்பின் முதல் உச்சி மாநாடு கொரோனா பரவல் காரணமாக காணொளி வாயிலாக நடைபெற்றது. இரண்டாவது உச்சி மாநாடு கடந்த ஆண்டு செட்பம்பரில் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடந்தது. இதில் 4 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். இதையடுத்து, தற்போது ஜப்பானில் நடைபெறும் மாநாட்டில் குவாட் அமைப்பின் தலைவர்கள் நேரடியாக கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டிற்கிடையே, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அப்பானீஸ், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேசவுள்ளார். இந்தோ-பசிபிக் பகுதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், உலகளாவிய விஷயங்கள், இரு தரப்பு உறவுகள், ரஷ்யா-உக்ரைன் போர், காலநிலை மாற்றம், பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.
இந்த நிலையில், ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு உள்ளூர் செய்தித்தாளான Yomiuri Shimbunஇல் ‘பிராந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கும்
குவாட் மாநாடு
’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார். அதில், இரு தரப்பு உறவு பற்றி விரிவாக அவர் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையேயான துடிப்பான உறவுகள் குறித்து எழுதினேன். எங்களிடையேயான உறவு அமைதி, நிலைத்தன்மை, செழுமைக்கான கூட்டு. புகழ்மிக்க 70 ஆண்டுகளை பூர்த்தி செய்யும் எங்கள் நட்பின் பயணத்தை நான் கண்டறிந்துள்ளேன்.
கொரோனாவுக்கு பிந்தைய உலகில், இந்தியா, ஜப்பான் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பு இன்றியமையாதது. ஜனநாயக விழுமியங்களுக்கு மதிப்பளிக்கும் விதமாக இருநாடுகளும் உள்ளன. இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் நிலையான, பாதுகாப்பான தூண்களாக இரண்டு நாடுகளும் உள்ளன. பல்வேறு துறைகளிலும் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
குஜராத் முதல்வராக நான் இருந்த நாட்களிலிருந்தே ஜப்பானிய மக்களுடன் பழகும் வாய்ப்பு எனக்கு தொடர்ச்சியாக கிடைத்துள்ளது. ஜப்பானின் முன்னேற்றங்களும், வளர்ச்சியும் எப்போதும் போற்றத்தக்கவை. தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, புதுமை, புதிய தொழில்கள் தொடங்குவது உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஜப்பான், இந்தியாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.” என்று பதிவிட்டுள்ளார்.
அதேசமயம், அரசு முறைப் பயணமாக ஜப்பான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதன்ஒரு பகுதியாக, ஜப்பான் நாட்டின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் நிறுவனத்தின் தலைவர் நோபுஹிரோ எண்டோவை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சந்தித்துப் பேசினார். டோக்கியோவில், ஆடை நிறுவனமான யுனிக்லோவின் தாய் நிறுவனமான ஃபாஸ்ட் ரீடெய்லிங் கோ லிமிடெட்டின் தலைவர் மற்றும் செயல் அதிகாரியான தடாஷி யனாயை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.