வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே 60 ஆண்டுகளுக்கு மேலாக சாலை இல்லாததால் இறந்தவர் உடலை டோலி கட்டி எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை கிராமத்திற்கு செல்ல 60 ஆண்டுகளுக்கு மேலாக சாலை வசதி செய்து தரப்படாமல் உள்ளது. இக்கிராமத்தில் சுமார் 300 வீடுகள் உள்ளன. 850 பேர் வசிக்கின்றனர். சாலை வசதிக்காக பலமுறை மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் கடந்த 2000ம் ஆண்டில் இக்கிராம மக்களே சேர்ந்து 10 லட்சம் ரூபாய் செலவில் ஏழு கி.மீ., துாரத்திற்கு தற்காலிக மண் சாலை அமைத்தனர். சில மாதங்களுக்கு முன் பெய்த கன மழையால் தற்காலிக மண் சாலையில் அரிப்பு ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், நெக்னாமலையை சேர்ந்த சரவணன், 37, என்பவர் பெங்களூரில் பணியாற்றி வந்தார். சிறுநீரக செயலிழப்பின் காரணமாக நேற்று அவர் உயிரிழந்தார். அவரது உடல் வாணியம்பாடிக்கு இன்று(மே 22) ஆம்புலன்சில் எடுத்து வந்தனர்.மலையடிவாரம் வரை ஆம்புலன்ஸ் சென்றது. அதற்கு மேல் 7 கி.மீ., துாரத்திற்கு சாலை இல்லாததால் அவரது உடலை டோலி கட்டி துாக்கிச் சென்று அடக்கம் செய்தனர்.
நாடு சுதந்திரமடைந்து 70 வருடங்களுக்கு மேல் ஆகியும் நெக்னாமலை கிராமத்திற்கு அரசு சாலை வசதி செய்துதராமல் இருப்பது மிகுந்த சிரமமாக இருப்பதாக அக்கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.
Advertisement