நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும், ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படத்தின் ட்ரெயிலர் நாளை வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தடுத்து நடித்து வருவதுடன், பாலிவுட் மற்றும் டோலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். இதையடுத்து ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’, ‘எண்ட்கேம்’, ‘கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர்’, ‘சிவில் வார்’ போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி கிரே மேன்’ (The Gray Man) ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடித்து வந்தார்.
இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. அதற்காக நடிகர் தனுஷ் சுமார் மூன்று மாத காலம் அமெரிக்காவில் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார். அந்தப் படத்திற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் தனுஷுடன், ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகிய பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை பிரபல ஓ.டி.டி. தளமான நெட்ஃபிளிக்ஸ், சுமார் 1500 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்தப்படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் காட்சிகள் கடந்த பிப்ரவரி மாதம் 4-ம் தேதி மிரட்டலாக வெளியானது. ஆனால், அதில் தனுஷ் இல்லாததால், தனுஷ் சம்பந்தமான காட்சிகளை வெளியிடுமாறு அவரது ரசிகர்கள் தொடர்ந்து ட்வீட் செய்து வந்தனர். அதன்பிறகு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நெட்ஃபிளிக்சில், கடந்த மாதம் 26-ம் தேதி வெளியானது. ஆனால் வழக்கம்போல் அதில் நடிகர் தனுஷ் இல்லை.
எனினும், நெட்ஃபிளிக்ஸ் இந்தியா ட்விட்டர் பக்கத்தில், நடிகர் தனுஷின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை முதன்முதலாக வெளியிட்டு, ‘தி கிரே மேன்’ படத்தில் நடிகர் தனுஷ், வேற மாறி வேற மாறி என்று பதிவிடப்பட்டிருந்தது. மேலும் இந்தப் படம் வரும் ஜூலை 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்விட்டர் எமோஜி இன்று வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் ட்ரெயிலர் நாளை வெளியிடப்படுவதாக நெட்ஃபிளிக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
Ryan Gosling. Chris Evans. The Gray Man.
The trailer tomorrow. pic.twitter.com/u0ojTMF4Dl— Netflix (@netflix) May 23, 2022