மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பா.ஜ.க தலைமையிலான ஆட்சியை ஹிட்லர், முசோலினி, ஜோசப் ஸ்டாலின் ஆகியோரின் ஆட்சியுடன் ஒப்பிட்டு கடுமையாகச் சாடியிருக்கிறார்.
கொல்கத்தாவில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த மம்தா, “பா.ஜ.க-வின் ஆட்சியானது ஹிட்லர், முசோலினி, ஜோசப் ஸ்டாலின் போன்றவர்களின் ஆட்சியைவிடவும் மிகக் கொடுமையானது. பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு, மாநில விவகாரங்களில் தலையிட மத்திய அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. பா.ஜ.க-வின் இத்தகைய செயல், நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பின் மாண்பை குலைக்கிறது. எனவே, ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமெனில், மத்திய அமைப்புகளுக்கு சுயாட்சி கொடுக்கப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் எந்தவொரு அரசியல் தலையீடும் இல்லாமல், மத்திய அமைப்புகளை பாரபட்சமின்றி செயல்பட அனுமதிக்க வேண்டும்” என்றார்.
அதைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் சமீபத்திய பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு, உஜ்வாலா திட்டத்தின்கீழ் சமையல் எரிவாயுக்கான ரூ.200 மானியம் குறித்து மம்தாவிடம் பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த மம்தா, “எந்தவொரு தேர்தலுக்கு முன்பும் அவர்கள் (பா.ஜ.க) இதைச் செய்கிறார்கள். வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ள பிரிவினரில் ஒரு சிறியப் பகுதி மட்டுமே உஜ்வாலா யோஜனாவின் கீழ் வருகின்றனர். அப்பை இருக்கையில், ஏழை மக்கள் எப்படி ரூ.800-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்குவார்கள்?” என்று கூறினார்.