மதுரையில் இருந்து தேனிக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து வரும் 27ம் தேதி முதல் துவங்க உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
‘மீட்டர் கேஜ்’ ரயில் பாதையாக இருந்த மதுரை – போடிநாயக்கனூர் ரயில் பாதை ரூ.450 கோடி செலவில் அகல ரயில் பாதையாக மாற்ற திட்டம் வகுக்கப்பட்டது. இதனால் இந்த வழித்தடத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் ரயில் சேவை நிறுத்தப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன.
இந்நிலையில் படிப்படியாக பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆண்டிபட்டி – தேனி அகல ரயில் பாதையில் கடந்த மார்ச் 31ல் மும்பை மத்திய சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோஜ் அரோரா ஆய்வு செய்தார். அதன்பிறகு 31 ஆம் தேதி. தேனி – ஆண்டிபட்டி இடையே 120 கிலோ மீட்டர் வேக ரயில் சோதனை ஓட்டம் நடந்தது.
இதையடுத்து மதுரையில் இருந்து தேனிக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் போக்குவரத்து வரும் மே 27ஆம் தேதி துவக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கு 12 பெட்டிகளுடன் கிளம்பும் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, நிறுத்தங்களில் நின்று காலை 09.35 மணிக்கு தேனியை வந்தடையும்.
அதே போல் மாலை 06.15 மணிக்கு தேனியில் இருந்து கிளம்பும் ரயில் ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, வடபழஞ்சி நிறுத்தங்களில் நின்று மாலை 05.35 மணிக்கு மதுரை சென்றடைகிறது. மதுரை தேனிக்கு இயக்கப்படும் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் அன் ரிசர்வ்டு ரயிலாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 26 ஆம் தேதி சென்னையில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி, மதுரை – தேனி ரயிலே துவக்கி வைக்கும் நிலையில், மறுநாள் 27 ஆம் தேதியில் இருந்து தினசரி ரயில் சேவை தொடங்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது, அதனால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM